என்னவோ மயக்கம்-9

8

அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,யோசனை கலைந்து இருவரும் பார்க்க,ரவீந்தரும்,இந்துவும் வந்துகொண்டிருந்தார்கள்.அவள் கையில் ஒன்பது மாத பெண் குழந்தை.

அருணை ரவீந்தர் பார்த்த பார்வையில் அளவுகடந்த கோபம் இருந்தது.

“இதுக்கு தான் உன்னை படிக்க வைக்கறோமா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்.உன்னோட பைத்தியக்காரத்தனத்தை இவனோட நிறுத்திக்கோ-ன்னு எத்தனை தடவை சொல்றது”எனவும் அருணிற்கு கோபம் வந்துவிட்டது.

“சார்”என்று அருண் ஆரம்பிக்கும் போதே,

“நான் பிரத்யாவோட கார்டியன்.அவங்ககிட்ட நான் பேசும்போது யாரும் குறுக்கே வரக் கூடாது”எனவும் இந்துவை பார்த்தான்.

அவளுக்கும் அதே நிலை தான் என்று சொல்லாமலே புரிந்துவிட்டது.அவள் கையிலிருந்த குழந்தை பார்க்கவே மிகவும் அழகாக,வாயில் எச்சில் வழிந்தபடி முன்னிருந்த பற்களை காட்டியபடி இந்துவின் கையிலிருந்து நழுவ முயற்சி செய்துகொண்டிருந்தது.

அதுவரை அமைதியாய் இருந்த ப்ரத்யா எழுந்து வந்து,வாங்கிக்கொண்டாள்.

“என் செல்லக்குட்டி”ஆசையாய் கன்னத்தில் முத்தம் வைத்து கொஞ்ச,ரவீந்தர் இளகிவிட்டான்.

“கைல அடிபட்டிருக்கு.வலிக்கும்.பாப்பாவை என்கிட்ட கொடு”

“என் கன்னுக்குட்டிய தூக்கினாலே வலி போயிடுமே”என்றவள்,மதியின் தலையை வருட,அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசத்தோடு அவளை அமரவைத்து கையை எடுத்து மருத்துவனாய் மாறி சொதித்துக்கொண்டிருந்தான் அந்த காவல் அதிகாரி.

“நேத்து என்ன நடந்துச்சு.இவன் எதுவும் சொன்னானா”கோபத்தோடு அருணை பார்க்க,

“ப்ரத்யா.இவங்க கிளம்பின பின்னாடி போன் பண்ணு.வர்றேன்”-அருண் கோபப்படவும்,சங்கடமாக பார்த்தாள்.

அதுவரை வாயை திறக்காத இந்து,”நீ இரு அருண்.இந்தர்-க்கு உன் மேல பொறாமை! அவரை விட உன்னை அதிகமா நம்பறான்னு கோபம்”எனவும் சந்தேகமாய் பார்த்தான்.

புருஷன் பொஞ்சாதி சண்டையாய் இருக்குமோ-யோசனையாய் பார்க்கும் போதே,

“இந்து”ரவீந்தர் அதட்டினான்.

அவள் அலட்டிக்கொள்ளாமல்,”ப்ரத்யா ரொம்ப பொசசிவ்.உன் மேல ரொம்பவே அதிகம்.ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறதா இந்தர்-கிட்ட சொல்லிட்டா.உன் மேல ரொம்பவே நம்பிக்கை வைச்சிருக்கா.அந்த நம்பிக்கையை காப்பாத்திக்க வேண்டியதும்,அவளை புரிஞ்சுக்க வேண்டியதும் உன் பொறுப்பு தான் அருண்.இந்த காதல் எல்லாம் உனக்கும் அவளுக்கும் இடையில தானே வந்தது,இடையில உன் குடும்பமோ அவளோட குடும்பமோ குறுக்கிட்டாலும்,எதிர்த்தாலும் சாமார்த்தியமா காதலை காப்பாத்திக்க வேண்டியது உன் பொறுப்பு தான்”என்றவள் குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.

இந்தர் ஆத்திரமாய் அவள் சென்றதை பார்த்துக் கொண்டிருக்க,அவரது கையை சுரண்டியவள்,”மாமா.நீ வெளில புலி.வீட்டுல எலி-ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.வீணா ஆக்ஷன் காட்டாதே.ஓடு..ஓடு..பாப்பா பயந்துடப் போறா”விரட்டவும்,அவளது தலையில் கொட்டியவன்,

“அவளுக்கு இன்னும் பொறாமை! நீ சொல்லி தான் அவளை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்ற கோபம் தீரலை.ஆனால் நல்ல பொண்ணு தான்”என்றான்.

“போதும் வழியுது மாமா.என்னை நான் பார்த்துக்குவேன்.நீ கிளம்பு”கிளப்புவதிலையே குறியாய் இருக்க,

அருணை ஒரு பார்வை பார்த்தவன்,”ஹாஸ்டல்ல இனி நீ தங்க முடியாது.வார்டன் சொல்லிட்டாங்க.என்ன பண்ணலாம்னு இருக்க”எனவும் ஓரக்கண்ணால் அருணை தான் பார்த்தாள்.

‘என் கூட இருப்பா’என்று சொல்லிவிடுவானோ என்ற பயத்தில்,

“வேற ஹாஸ்டல் பார்த்து கொடுத்துட்டு போ மாமா”என்றாள்.

“இனி ஹாஸ்டல் சரிப்பட்டு வராது.நம்ம பேமிலி பிரண்ட் நிராவோட வீடு சிட்டிக்குள்ள இருக்கு.ரொம்ப பாதுகாப்பான இடம்.அங்க இன்னும் நாலு பொண்ணுங்க தங்கி இருப்பாங்க.உனக்கு பிரச்சனையில்லையே”எனவும்

“இல்லையே” என்று தலையை உருட்டவும்,அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டவன்,

“நாம தான் யாரையும் நிராகரிக்கனும் ப்ரத்யா.ஒருத்தரை வேணும் வேண்டாம் சொல்ற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு.உன் விருப்பத்துக்காக எல்லாமே..எ..ல்..லாமே நான் செய்வேன்.இனிமேல் இப்படி முட்டாள்த்தனமா பண்ணாதே.எனக்கு கஷ்டமாயிருக்கு”என்றவனின் சில சொட்டு கண்ணீர் துளிகள் அவளது தலையை நனைக்க,

“நீ அழுவாத மாமா”என்றவளும்,அவனது கண்ணீரை துடைக்க,இந்த பாசப்போராட்டம் அருணிற்கு காண சகிக்கவேயில்லை.(இந்துவும் இதனால தான் ஓடிப்போயிட்டான்னு இவனுக்கு புரில,மரமண்டை)\

“நல்லா சொல்றான் அட்வைஸ்..இப்போ நான் இவளை விட்டுட்டு போனா கடத்திட்டு வந்து கட்டி வைச்சிடுவானா”மனதிற்குள்ளையே வசவு மழை பொழிந்தவன்,இன்னமும் இந்தர் நெஞ்சில் சாய்ந்திருந்த ப்ரத்யாவை காணும் போது அடிவயிற்றில் புகை கிளம்பியது(பையர் சர்விஸ்க்கு போன் பண்ணுங்கப்பா)

இந்தர் அடங்காதவனாய்,”ஒருத்தரை பிடிக்குது,பிடிக்கலை-ன்னு நாம தான் சொல்லணும்.நம்மளை யாரும் பிடிக்கலைன்னு சொல்லிடவே கூடாது.புரியுதா”எனவும்,

“புரியுது.நீ சொன்னா சரியா தான் இருக்கும் மாமா”என்றாள் சிறுபிள்ளையாய்!!

இவளின் இந்த பேச்சு அருணிற்கு புதிது.இந்தரிடம் காட்டும் அதீத ஒட்டுதல் அவனை கடுப்பின் எல்லைக்கே கொண்டு சொல்ல,சொல்லாமலே புறப்பட்டு வெளியில் வந்துவிட்டான்.அதை கவனித்தும் இருவரும் தடுக்கவில்லை.

வெளியில் இந்து அமர்ந்திருக்க,தனக்கு ஆதரவாய் பேசியவள் என்பதால் இயல்பாய் அவள் அருகே அமர்ந்தான்.

அவனை பார்த்து சிரித்தவள்,”ரொம்ப ஓவரா படம் ஓட்டறாங்களா”எனவும்,

சிரித்துக்கொண்டே,”ஆமாம்”என்றான்.

“அவங்க அப்படித்தான்.இந்தரை எட்டு வருஷமா லவ் பண்ணேன்.மனுஷன் ப்ரத்யாவை தான் மேரேஜ் பண்ண போறேன்னு என்னை சுத்தல்ல விட்டு ஏதோ போனா போகுதுன்னு,ப்ரத்யா சொன்னதுனால தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஓகே சொன்னார்”எனவும் ஆச்சர்யப்பட்டு போனான்..

எட்டு வருஷத்துக்கு முன்னன்னா,அப்போ அவளுக்கு பதின்மூன்று வயது தானே-மூளை காட்டிய கணக்கில் கொதித்துப் போனான்.

அதை உணர்ந்தாளோ,இல்லை மனதின் கொதிப்பை காட்ட நினைத்தாளோ,இல்லை ப்ரத்யாவை இனி தன் கணவனை விட்டு தள்ளி நிறுத்தி,அருணிடம் முழுவதுமாய் தள்ளிவிட நினைத்தாளோ-தானாய் விளக்கம் கொடுத்தாள்.

“இவளுக்கு பத்து வயசு இருக்கும் போதே மேரேஜ் நிச்சயம் பண்ணிட்டாங்க”

“என்னது”-அதிர்ந்து எழுந்தே விட்டான்.

“கூல்! அது அப்போ! இவங்க சரியான காட்டுவாசி குடும்பம்.குடும்பத்தை விட்டு வெளில மேரேஜ் பண்ணக் கூடாதுன்னு அப்படியொரு வெறி! அவளுக்கு பத்து வயசு ,இவருக்கு இருபத்திநாலு..என் ஆளும் விருப்பு,வெறுப்பு எதுவும் இல்லைன்னாலும்,மாமன் பொண்ணு தான் உலகம்,அவ சொல் தான் வேத வாக்கு-ன்னு அவ என்ன சொன்னாலும் இப்ப வரைக்கும் தலையாட்டுவார்..இவளுமே இங்க காலேஜ் வரதுக்கு முன்னாடி வரைக்கும்,மாமனை தான் கட்டிக்க போறேதா சொல்லுவா.என்கிட்டவே சொல்லியிருக்கா”

“ஓ”-ஒற்றை வார்த்தையில் திகைப்பை வெளிப்படுத்தினான்.

சிநேகமாய் சிரித்தவள்,”நீ நினைக்கற அளவுக்கு எல்லாம் இல்லை.ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் தான்.ஆனால் நீயும்,நானும் கொஞ்சம் கேப் கொண்டு வந்துட்டோம்”

“நானா?”-புரியாது கேட்க,

“நீயே தான்.அவ பின்னாடியே நீ சுத்தினதினால தான்,அவளுக்கு மாமா மேல இருக்க பாசம் வேறன்னு புரிய வந்திருக்கு.ரொம்ப தெளிவா உன் பேரை சொல்லி தான் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினா”என்று அவன் மனதின் எரிமலையை அடக்கினாள்

இத்தனை வருஷமா பின்னாடியே ரோமியோ மாதிரி சுத்தினதுக்கு பலன் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் கிடைச்சுது-ன்னு நினைச்சனே..ஆனால் அப்போவே பல்ப் எரிஞ்சிடுச்சா??(நீ ரொம்ப லேட்டு அருண்)

முகமெல்லாம் பிரகாசத்தோடு,அத்தனை பல்லையும் காட்டிக்கொண்டு,”அப்போவேவா”என்று கேட்க,

“நிஜமா தான்”என்றாள்.

“பொய் சொல்லலையே?”சந்தேகமாய் இழுக்க,

“நீ பிரத்யாகிட்ட கேட்டு பார்.ஆமாம்னு தான் சொல்லுவா.ஆனால் அவ பெரியம்மாவுக்கு உன்னை பிடிக்காது”

“ஒருத்தவங்களை பிடிக்கும்,பிடிக்காதுன்னு நாம தான் முடிவு பண்ணனும்.மத்தவங்க முடிவு பண்ண கூடாது.உங்க ஹஸ்பன்ட் தான்,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த புது தியரி கத்துக் கொடுத்தார்.ஸோ எனக்கு அவங்களை பற்றி ஒரு கவலையுமே இல்லை”என்றவனின் கண்கள் அறைக்குள் தாவ,அங்கு அவன் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.

சற்று முன் எப்படி அவன் மேல் சாய்ந்திருந்தாளோ,அது போலவே இல்லையில்லை..கொஞ்சம் வேறுபாடாய்,தனது தலையை இந்தரின் தோள் மேல் சாய்த்து அமர்ந்திருந்தாள்.கொஞ்சம் மனம் மட்டுப்பட்டது..

அதை பார்த்த இந்துவும்,”காதல்னு வந்துட்டாளே டென்ஷனும் வந்துடும்,ரெண்டும் ஒட்டிப் பிறந்த ரெட்டை பிறவிகள்.இதுக்காக எல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது.தீயா வேலை செய்யணும் அருண்”-சந்தானத்தின் மாடியுலேசனில்(modulation) சொல்லிக்காட்ட,

“ஆனாலும் இது ஓவர் தான்-க்கா.நானெல்லாம் படம் ஓட்டுனேன்னா....?”முடிக்கும் முன்னே குறுக்கிட்டவள்,

“ஓட்டினாலும் ஒன்னும் நடக்காது..ரெண்டுமே விஷம்..கண்டுக்காத மாதிரியே நம்மளை வெறுப்பேத்துவாங்க”என்றதை அவன் நம்பவில்லை..

தான் யாருடனும் பேசினால்,நிச்சயம் பொறாமைப்படுவாள் என்றே நம்பினான்.

இந்துவின் பேச்சில்,பிரத்யாவின் குடும்ப பின்னணியை பற்றிய கவலை மறந்தவனாய்,அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்தவன்,புன்னகையோடு இந்தர் முன்னே நின்றான்.

“நான் அருண்.என்னோட பேமிலி விவரம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன்.எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு.அங்க போறதுக்கு முன்னாடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.உங்களோட பர்மிஷன் வேணும்”என்றதும் ப்ரத்யா திகைத்து போய் பார்த்தாள்.

“இப்போவேவா?”-வாய்விட்டே கேட்க,

“எப்போவோ நடக்க போறது தானே! அதை இப்போவே பண்ணிடலாம்.எதையும் தள்ளிப்போட்டுட்டு போறது எனக்கு பிடிக்காது”என்றவன் இந்தரை பார்க்க,

“எங்க வீட்டு பொண்ணு கல்யாணம் பிரம்மாண்டமா தான் நடக்கும் அருண்.நீ உன் வீட்டுல பேசு.சம்மதிக்க வை.திருட்டுத்தனமா எதையும் பண்ற அளவுக்கு நீயோ,பிரத்யாவோ எந்த தப்பும் பண்ணலை”என்ற போது,மாமனை விழி விரித்து பார்த்தாள் ப்ரத்யா.

“ரெண்டு பேருக்குமே என் சம்மதத்தை கேட்கனும்னு தோணவே இல்லையா??”

“அதெதுக்கு”-ஒருசேர இருவரின் குரலும் வர,ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

“அப்போ பிரத்யூ?”-எனவும் அங்கே ஓர் நிமிட மௌனம் அரங்கேறியது.

சுதரித்துக்கொண்டது அருண் தான்.

“ப்ரத்யா.இப்போவே சொல்லிடறேன்.உனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தா,நீ உன்னோட ஷேர் எல்லாம் பிரத்யூ பேர்-க்கு மாத்திடு.எனக்கு அதனால எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால்..இனி..இந்த நிமிஷத்துல இருந்து,பிரத்யூ உறவை நீ கட் பண்ணி தான் ஆகணும்..நேத்து எனக்கு எவனோ ஒருத்தன் வீடியோ அனுப்பின மாதிரி,நாளைக்கு என்னை சார்ந்தவங்களுக்கு அனுப்பி வைச்சா? அப்போ என் நிலையை யோசிச்சு பார்..

ரெண்டு பேருக்கும் மூக்கு மட்டும் தான் லைட்டா வித்தியாசம்.எல்லார்கிட்டவும் அதை நான் சொல்லிட்டு இருக்க முடியுமா..இப்போவே இந்த விஷயம் தெரிஞ்சா வீட்டுல என்ன பூகம்பம் வெடிக்கும்னு தெரில..உனக்கு அவங்களோட எந்த தொடர்பும் இருக்காதுன்னு ஒரு உறுதி கொடுத்து தான் வீட்டுல பேசப் போறேன்.நீ இதுக்கு சம்மதிச்சு தான் ஆகணும்”

சரியென்று தலையாட்ட முடியவில்லை..ரத்த உறவை,எப்படிப்பட்ட குற்றம் செய்தாலும் ஒதுக்கவே முடியாது.

அமைதியாய் அவள் அமர்ந்துகொள்ள,இந்தர் அருணின் பேச்சில் உள்ள நியாயம் புரிந்தவனாய்,”உன் வீட்டுல தெரிஞ்சு கேட்டா,சொல்லிடு அருண்.அதுவரைக்கும் சொல்லாமல் இருக்கது தான் நல்லதுன்னு படுது”என்றதும்,ஒப்புக்கொண்டான்.

“உனக்கு மெசேஜ் பண்ண,அந்த நம்பர் கொடு,விசாரிக்கறேன்”எனவும் கொடுத்துவிட்டான்..

அதற்கு பின் எல்லாமே அவசரமாய் நடந்தது.அருணிற்கு வீடியோ அனுப்பியவன்,லவர்ஸ் டே கொண்டாட்டத்தில் பங்கு பெற வந்தவன் தான்.அவனும் வெளிநாட்டில் வசித்தவன் தான்.ஓரிரு முறை பிரத்யூவை அவளது காதலுடன் பார்த்திருக்கிறான்.அவர்களை பற்றி தெரிய வந்தவுடன்,அவளையும் அணுக முயற்சி செய்திருந்தான்.அதற்கு அவள் பிடிகொடுக்கவில்லை.இவனும் வற்புறுத்தும் ரகம் இல்லை என்பதால் விலகி வந்திருந்தான்.ஆனால் இன்று அருணுடன் அவளை பார்த்த பின்பு,”என்கிட்ட மட்டும் பெரிய இவளாட்டம் சீன் போட்டா..என்னைக்கும் ஆள் மாத்தற எண்ணமே இல்லைன்னு கோபத்துல கொதிச்சா..ஆனால் இப்போ..இவனோட..அதுவும் இங்கே,நிச்சயமா இவனுக்கு அவளை பற்றி தெரிந்திருக்காது.தெரிய வைப்போம்”என்ற எண்ணத்துடன் தான் அனுப்பினான்.  

போன் நம்பர் எப்படி கிடைத்தது என்றெல்லாம் பெரிதாக ஆராய வேண்டாம்.

அருண் லவர்ஸ் டே கொண்டாட்டத்தில் ஜெயித்துவிடுவோம் என்று நம்பி தனது அலைபேசி எண்ணை கொடுத்திருந்தான்.விசாரணையில் தெரிய வரவும்,கொஞ்சம் நிம்மதியும்,இதுபோல் எத்தனை பேர் கிளம்புவார்கள் என்ற பயமும் ஏற்பட்டது.

‘எது நடந்தாலும்,துணைக்கு நாங்க இருப்போம்’என்ற குடும்ப உறுப்பினர்களின் உறுதுணை தான் ப்ரத்யாவை அமைதியடைய செய்தது..

எல்லாம் சரி..அப்போ எதுக்கு பிரிஞ்சாங்க-கேள்வி வருதில்லையா?

அருணை விட ப்ரத்யா வயதில் மூத்தவள் என்ற பிரச்னையை முன் வைத்தார் அருணின் தாத்தா வெங்கடாசலம்..

   அதுவும் இவனை விட முழுதாய் நாற்பத்தெட்டு மணி நேரம்,இருபத்திரண்டு நொடிகள்,நான்கு வினாடி-பெரியவள்-என்ற வாதத்தை வெங்கி முன் வைக்க,இடியாப்ப சிக்கல் ஆரம்பித்தது அங்கே!!!!



No comments:

Post a Comment