என்னவோ மயக்கம்-5


5



பிரத்யாவின் மகிழ்ச்சி மதுவிற்கு கொஞ்சம் கலக்கத்தையே கொடுத்தது.முழுதாய் நான்கு வருட பழக்கம்.இதுநாள் வரைக்குமே அருணைப் பற்றி பெரிதாய் எதையுமே ப்ரத்யா பகிர்ந்துகொண்டதில்லை.இரண்டு வருடத்திற்கு முன்னர் திடீரென்று கிளம்பி சென்றாள்.பதினெட்டு நாட்களுக்கு பின் திரும்பி வந்தாள்.

‘எங்கே போனாய்’என்ற கேள்விக்கு பதிலில்லை.அதன் பின்னர் அவளின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றங்களினால் தான் ப்ரத்யா காதலிக்கும் விஷயமே மதுவிற்கு தெரிய வந்தது.அதுநாள்வரை எப்போதும் ஜாலியாய் எந்த கவலையுமே இல்லாமல் இருந்த பிரத்யாவின் மனதிற்குள் காதல் இருந்தது என்றால்,ஒருவராலும் நம்ப முடியவில்லை.

எங்கேயோ சென்றவள் திரும்பி வந்த பின்பு,அடிக்கடி சோகத்தில் மூழ்கிவிடுவாள்.உடனே சிரிப்பாள்.அடிக்கடி கனவுலகில் மிதந்துகொண்டே பல்லைக் காட்டுவாள்.மதுவிற்கு கடுப்பாக இருக்கும்(சிங்கிள்ஸ்க்கு லவ் பண்றவங்க கூத்தை பார்த்தா இப்டி தான் பேக் பையர் ஆகும்..ஹி ஹி.எனக்கும் ஆகியிருக்கு)

“பல்லைக் காட்டாதடி பன்னி”கடுப்பில் விலங்குகளின் பேரை எல்லாம் அடைமொழியாக்கி  திட்டினால்,

அவார்ட் கொடுத்தது போல தோழியின் கன்னத்தில் முத்தமிட்டு,”சரிடி என் பட்டுக்குட்டி”என்று கொஞ்சுவாள்.

ஆனால் அருணைப் பற்றிய விஷயத்தை சொல்லவே மாட்டாள்.ரொம்ப அடமாய் அமைதியாய் இருந்துவிடுவாள்.

ஒருநாள் பொறுக்க முடியாமல்,”நீ அருணை பற்றி ஷேர் பண்ணிக்கிட்டா,நானும் அவன் மேல பித்தாகிடுவேன்னு நினைச்சுட்டியா?”கேட்ட நொடி,பிரத்யாவின் வாயில் வைத்திருந்த ப்ரெட் கீழே விழ,கண்ணும் வாயும் ஒரே மாதிரி பெரிதாய் அகல விரிவடையும் என்பதையே அன்று தான் மது கண்டுபிடித்தாள்.(அரிய பெரிய கண்டுபிடிப்பு.ஆஸ்கார் அவார்ட் உனக்குதான்டி அமுல்பேபி)

மது தான் அவள் வாயை மூட வேண்டியதாய் போயிற்று!!

“நா..ன்..நான்..அப்படியெல்லாம் நினைக்கலியே”பரிதாபமாய் கண்ணின் வேர்வை துளிகள் தரையில் விழும்படி கேட்டதும்,தலையில் அடித்துக் கொண்டவள்,

“இதுக்கெல்லாமா அழுவாங்க? இப்போ சொல்லு.அருண் எங்கே இருக்கான்.ஏன் உன்னை விட்டு போனான்.எதுக்காக இந்த பிரிவு?”என்றாள்.

“தப்பா நினைக்காதே மது.எங்க காதலை யாரும்,எதுக்காகவும் குறை சொல்றதில  எனக்கு விருப்பமில்லை.எங்க ரெண்டு பேரில் யார் மேல குற்றம்? தெரிஞ்சுக்கிட்டு யாரும் என்னையோ,அவனையோ தாக்கி பேசறதை என்னால தாங்கிக்கவே முடியாது.சரியோ தவறோ எங்க குறைகள்,நிறைகள் பொதுவில பேசப்படறதை நான் விரும்பலை.பொக்கிஷமா நான் மதிக்கற என் நினைவுகளை என்னால இன்னொருத்தரோட,அது என் உயிர்த்தோழியான உன்கிட்டவும் பகிர்ந்துக்க என்னால முடியும்னு தோணலை”படபடவென்று சொன்னவள் தோழிக்கு முகம் காட்டாமல் நின்றுகொண்டாள்.

தொடர்ந்து வந்த இரண்டு நாட்களுமே மது ப்ரத்யாவை கண்டுகொள்ளவில்லை.ஆனால் அடிக்கடி ஏக்கமாய் தழுவும் பிரத்யாவின் பார்வையில்,மதுவின் இரும்பு மனமும் உருகித்தான் போயிற்று.

காலம் இப்படியே நகர வேலை பறிபோன பின்னர்,அடுத்த வேலை தேடும் முயற்சியில் இருந்தவளை,”ஒரு சின்ன கேப் விடுவோம் மது.அக்காங்ககிட்ட சொல்லிடு.நாம என்ஜாய் பண்ணலாம்”என்றவுடன் கிளம்பிவிட்டாள் மது.

எங்கே செல்ல வேண்டும் என்றெல்லாம் மதுவிற்கு தெரியவில்லை.வீடு,பள்ளி,கல்லூரி,வேலை பார்க்கும் இடம்,விடுதி தவிர வேறு எங்கேயுமே சென்றதில்லை.

இதை ஒருமுறை சொன்ன பின்பு தான் ப்ரத்யா முடிவெடுத்து இப்படி டூர் போக அழைத்தாள்..மதுவும் சம்மதித்துவிட்டாள்..

மது பிரத்யாவின் செயல்களுக்கெல்லாம் கட்டுப்படுவதற்கு காரணமும் இருந்தது.சிறு வயதிலிருந்தே தன்னை யாரும் கொஞ்சியதில்லை என்று எதிர்பாராமல் ஒரே முறை ,ஒரே ஒரு முறை சொன்ன காரணத்திற்காக,எப்போதும் ப்ரத்யா மதுவை ,”செல்லக்குட்டி,பட்டுக்குட்டி”என்று கொஞ்சிக்கொண்டே அவள் பின்னே சுற்றுவாள்.

தன் கோபத்திற்கும் எதிர்வினையாய்,கொஞ்சலை மட்டும் பதிலாய் கொடுப்பவளின் ஆசையை அவளால் கெடுக்க முடியவில்லை.அதனால் தான் இப்போதும் அருணுடன் அவள் இருந்த இடங்களை,ஆவலாய் பார்க்க கிளம்பிய போதும் மறுப்பு தெரிவிக்காமல் உடன் பயணித்துக்கொண்டிருக்கிறாள்.

பிரத்யாவின் முகத்திலையே பார்வையை வைத்திருந்தவள்,அவளின் கவனம் போனிலும் சாலையிலும் மாறி மாறி இருப்பதை உணர்ந்து,”ரவீந்தர் கால் பண்ற நேரம் தானே.எங்கேயாவது காரை ஓரமா பார்க் பண்ணிட்டு பேசிடு”என்றாள்.

“சிட்டிக்குள்ள போயிட்டு கால் பண்றேன் மது.இந்த ஏரியால பார்க் பண்றது சரின்னு தோணலை.நம்ம சேப்ட்டி தான் முதல்ல முக்கியம்”என்ற போது,தலையாட்டியவள்,களைப்பாக உணர்ந்ததினால்,தூங்கிவிட்டாள்.

அவளது இருக்கையை தூங்குவதற்கு வாகாய் சரிப்படுத்திய ப்ரத்யா,சிட்டிக்குள் நுழைந்த உடனே ரவீந்தர்க்கு அழைத்துவிட்டாள்.

“என்னங்க மேடம்.திடீர்னு எங்க நினைப்பு வந்திருக்கு.நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லையா! எங்களையெல்லாம் மதிச்சு கால் பண்ணிருக்கீங்க.என்ன விஷயம்?”

“மாமா ப்ளீஸ்”

“ஹோ,இப்போ தான் மாமான்னு தெரியுதா? ஒருநாளைக்கு எத்தனை  முறை நான் ,அக்கா,இந்து மாறி மாறி கூப்பிடுவோம்.ஒருமுறையாவது எடுத்து பேசியிருக்கியா?”

“நீங்க மேரேஜ்”என்று முடிக்கக் கூட இல்லை.

“நாங்க கேட்டா,நீ முடியும் முடியாதுன்னு அடிச்சு சொல்லு.அதை விட்டுட்டு இப்படி போனை கட் பண்ணா? ஒருவேளை நாங்க ஆக்சிடென்ட் ஆகி கிடந்து,எமெர்ஜென்சிக்கு கூப்பிட்டாலும் இப்படி தானே எடுக்காமல் இருப்ப”காட்டமாய் வினவ,

“இனி உடனே கால்(அழைப்பு) எடுக்கறேன்”என்றாள் பரிதாபமாய்!!

“எமெர்ஜென்சி,ஆக்சிடென்ட்னு சொன்னால் தான் உங்களுக்கெல்லாம் புத்தி வருதுல்ல.முதல்ல எந்த விஷயத்தையும் நேருக்கு நேர் துணிவோடு எதிர்கொள் ப்ரத்யா.ஓடி ஒளியறது கோழைத்தனம்.நீ மேரேஜ்க்கு முடியாதுன்னு சொன்னா,உன் கைகாலை கட்டி நாங்க மணமேடைக்கு தூக்கிட்டுப் போயிடுவோமா.அந்த அளவுக்கு நாங்க தரம் தாழ்ந்தவங்களா? இல்லை உன்னாலையே உன் காதலை ஜஸ்டிபை பண்ண முடியலையா? அவன் உன்னை எந்த அளவுக்கு கீழ்த்தரமா பேசியிருக்கான்.உன்னை தற்கொலை செய்ய தூண்டுனதுக்கே,அவன் மேல கேஸ் போட்ருக்கணும்.உனக்காக விட்டேன் பார்.என்னை செருப்பாலையே அடிக்கணும்”

“மாமா ப்ளீஸ்”என்றாள் அதற்கும்!!

“இந்த ஒருவார்த்தையே கத்து வைச்சிருக்க! உன்கூட பேசவே கடுப்பா இருக்கு.உன் பொறுப்பை என் தலைல கட்டிட்ட ஒரே காரணத்துக்காக பொறுத்துப் போறேன்”

“நீங்க ஒண்ணும் அவ்ளோ கஷ்டப்பட்டு என் பொறுப்பை சுமக்க வேண்டாம்”என்றாள் கோபமாய்..

“ரோஷமோ!! சகிக்கல. நீ என்னை உன் பிரண்டா,மாமாவா,ஒரு சகோதரனா..ஏன் உன்னை குழந்தை போல பார்த்துக்கற ஒரு கார்டியனா நினைச்சிருந்தா,நீ என்னை அவாய்ட் பண்ணுவியா.முழுசா ஒரு மாசமா நீ ஊர் சுத்திட்டு இருக்க.அதை என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலை.நான் தான் கேனையனா உன்னை பாதுகாக்கணும்னு துடிச்சிட்டு இருக்கேன்.ஆனால் நீ?”

“.......”பேச்சில்லாத அவளது அழுகையும்,மூக்கை உறிஞ்சுவது மட்டும் தெளிவாய் கேட்க,

“ஏன்டா கண்ணம்மா இப்படி இருக்க.அவன் தான் வாழ்க்கைன்னு நீ முடிவு செய்தது தப்பே இல்லை.ஆனால் அவனா ஒரு முடிவு செய்து,உன்னை தனியா விட்டுட்டு போன பின்னாடி,உனக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருந்திருந்தால்,அவனை போடான்னு சொல்லிட்டு சந்தோஷமா இருந்திருப்ப. உன்னால முடியலை ஏன் ப்ரத்யா”

“ஹ்ம்ம்..ம்ம்..தெரியலையே மாமா”

“நீயெல்லாம் தேறாத கேஸ்”(நாங்க எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம் மிஸ்டர் ஏசிபி.நீங்க ரொம்ப லேட்டு.போலிஸ் இல்லையா..அதான் இப்டி எல்லாத்துலையும் லேட்ட்ட்ட்ட்ட்டு)

“.........”மீண்டும் பதிலில்லாமல் போக,

“நீ எதுக்காக கூப்பிட்ட”என்றவுடன் எங்கிருந்தது தான் உற்சாகம் வந்ததோ!!

“மாமா.என் பிரண்ட் மது இருக்கால்ல.அவளுக்கும் வேலை போயிடுச்சு.என் கூட தான் இருக்கா.நம்ம ஆர்கனிஷேஷன்ல,கொஞ்சம் அதிகமா சேலரி கொடுக்கற மாதிரி ஒரு வேலை ஏற்பாடு பண்ணி கொடுங்க.அதுவும் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான்”

“சரி.ஆனால் நான் சொல்றதை நீ கேட்கணும்”

எதற்கும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்ற துணிவு வந்துவிட்டதால்,”உங்க பேச்சை மீறுவேனா மாம்ஸ்.சொல்லுங்க”என்ற போது ரவீந்தர்க்கு வியப்பு தான்..

இந்த பெண்கள் நொடியில் அழுது,சிரித்து,கோபப்பட்டு..என்று விதவிதமான பாவனைகளை எப்படித்தான் கொண்டு வருகிறார்களோ!!(உலக நாயகன் எல்லாம் எம்மாத்திரம்..நாங்க எல்லாம் பிறக்கும் போதே,ஆஸ்கார்க்கு அப்ளிகேஷன் போட்டவங்களாக்கும்)

வியப்பை மறைத்தவன்”உனக்கு இன்னும் முப்பது நாள் டைம் இருக்கு தானே.அதுவரைக்கும் எங்ககூட வந்து இரு.தனியா இருந்தா உன்னை நீயே ஏதாவது பண்ணி கஷ்டபடுத்திக்குவ!! நீ வந்துடு.வேலை கன்பார்ம் பண்ணிடறேன்”

“கண்டிப்பா வர்றேன் மாம்ஸ்.ஆனால் என்னை இதை செய்,அதை செய்னு கட்டாயப்படுத்தக் கூடாது!!”

“எங்களால அது முடியாததினால தான்,கைக்கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்”என்றவர்,

“இன்னொரு விஷயம்.உன் அம்மாவோட கேஸ் இந்த வாரம் கோர்ட்க்கு வருது”

“நான் அருண்க்கு வாக்கு கொடுத்திருக்கேன் மாமா.அவங்க விஷயத்தில தலையிடவே கூடாதுன்னு சொல்லியிருக்கான்.நான் மீறமாட்டேன்”என்றாள்.

ரவீந்தர்க்கு இந்த பதிலால் மிகவும் வருத்தம் தான்.முன்பே அம்மாவை கண்டுகொள்ள மாட்டாள் தான்.அதற்கு தானும் அனுமதித்ததில்லை என்பது புரிந்த போதிலும்,பிறந்ததிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களை விட..சில நாட்கள் பார்த்துப் பேசி பழகிய ஒருவனின் சொல் மிகவும் முக்கியமாதாய் போய்விடும் இந்த விந்தை..எப்படி நடக்கிறது? யாருக்கும் இது புரியாத புதிர் தான்..!!

பிரத்யாவின் அலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டே விழித்த மதுவிற்கு திக்கென்றது.

தற்கொலைக்கு தூண்டியவன் மேலையா இத்தனை காதல்!!(சொக்குப்பொடி போட்டிருப்பானோ? யார் கண்டா)

“ப்ரத்யா”

மது அதட்டிய சத்தத்தில்,”மாமா,நாங்க நாளைக்கு வந்துடறோம்.இப்போ வைச்சுடறேன்”என்றபடி போனை அணைத்தவள்,

“என்னாச்சு மது.எதுவும் வேணுமா”அக்கறையோடு கேட்க,

“உன் கையில..அ..ப்போ உடன் இடது கையில இருக்க அந்த தழும்பு,உன்னோட தற்கொலை முயற்சிக்கான அடையாளமா”என்றதுமே திக்கென்றது ப்ரத்யாவிற்கு!!

முட்டைக் கண்ணை சுருக்கி,”இல்.ல..இல்ல...இது வேற”திக்கி திக்கி சொன்ன போதே புரிந்துவிட்டது.

“லூசாடி நீ.எதுக்காக அந்த தற்கொலை முயற்சி?அவன் வேண்டாம்னு சொல்லிட்டுப் போனா,நாலு நாள் அழுது தொலைச்சு,அவன் கூட பழகினதையும் துடைச்சி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தானே! அதை விட்டுட்டு,அற்ப காரணத்துக்காக உயிரை விட துணிஞ்சிருக்கியே! உன்னை மாதிரி சில அரைகுறைங்களால தான் பல தப்பு நடக்குது.அவன் இல்லைன்னா உன்னால வாழ முடியாதா? எத்தனையோ பேர் எத்தனையோ வலிகளையும் வேதனைகளையும் அனுபவிச்சிட்டு வாழல?ஆனால் நீ?? shame on you prathya

எப்போதோ நடந்தது தான்.ஆனால் இப்போது திட்டுகிறாளே!!

ஐயோகோ!! அழுகை அழுகையா வருதே!! -மூச்சை அடக்கிக்கொண்டு கப்சிப் என்று அமர்ந்திருந்தவளை பார்த்தாலே மதுவிற்கு பிபி எகிறியது.

மேலும் ஏதோ அசிங்கமாய் திட்ட வந்ததை புரிந்துகொண்டவள்,”அது வந்து மது,தப்பு என் மேல தான்! அவன் கொஞ்சம் திட்டிட்டானா! நானும் அப்போ கொஞ்சம் பாடி வீக்கா இருந்தனா!! அதான் அப்டி பண்ணிட்டேன்”என்றாள்.

“நம்பிட்டேன்,நம்பிட்டேன்”

“நிஜமா மது! என் மேல தான் தப்பு.உனக்கு அரவின் தெரியும் தானே”

“யூ மீன் ஆக்டர் அரவின்”

“எஸ்,அவனே தான்.அவனுக்கு மேரேஜ் ப்ரோபோசல் அனுப்பியிருந்தேன்.ஒரு வருஷம் கழிச்சு இன்டர்வியூ கார்ட் வந்துச்சு”

“வாட்! இன்டர்வியூ கார்டா”

“ஆமா..மொத்தம் நாலாயிரம் பேர் அப்ளை பண்ணியிருந்தாங்க.எனக்கு கார்ட் வந்த உடனே ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.அதை உடனே போய் அருண்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்.அவன்..அவன் கொஞ்சம் அசிங்கமா பேசிட்டான்..அவன் ப்ரேக்அப் பண்ணிக்கலாம்னு சொன்னானா.......அதான்,அதான் இப்டி”கொஞ்சிக்கொஞ்சி இடைவெளிவிட்டு இவள் சமாதானம் கூறிய தினுசில்,மதுவிற்கு இது உண்மையா,பொய்யா என்று பிரித்தறிய முடியவில்லை.

ப்ரேக் அப் ஆனதற்காக தற்கொலை முயற்சி செய்ய துணிந்தவள்,எதற்காக அரவினுடன் திருமணம் செய்ய,அப்ளிகேஷன் போட்டாளாம்-கண்ணைக் கட்டியது மதுவிற்கு!!

எப்போதோ காதல் என்றால் என்ன என்று படித்து தொலைத்த வாசகம் வேறு கண்ணுக்குள் வந்து போனது.

Love is the 7th sense that destroys all the 6th senses and make the person Non-sense. (மெய்யாலுமே தான்!!)

திகைப்பை மறைத்த மது,”நீ நல்லவளா!! கெட்டவளா!!என்றாள் நாயகன் ஸ்டைலில்!!

“தெரியலையே”

“ஹோ.அப்போ நீ லூசா,இல்லை லூசு மாதிரியே நடிக்கிறியா”

“இதென்னடி கேள்வி”

“பின்ன,ஒருத்தனை லவ் பண்ணிட்டு,அவன்கிட்டவே இன்னொருத்தனை கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னா,உன்னை திட்டாம கொஞ்சுவானா?”

“மது ப்ளீஸ்.இந்த டாப்பிக் வேண்டாமே”கண்ணை சுருக்கி கெஞ்சவும்,

“எப்படியோ போய் தொலை.இனியும் இந்த மாதிரி முட்டாள்த்தனமா பண்ணாம இருந்தாலே போதும்”என்றவள் கண்ணை மூடி தூங்க ஆரம்பிக்க,

“எப்படியோ சமாளித்துவிட்டோம்”-போலியான நிம்மதியடைந்தாள்.
தோழியிடம் பொய் உரைத்ததில் பெரும் வருத்தமும் கொண்டாள்.

எதற்காக அவன் திட்டினான்? -எல்லாரிடமும் விளக்கம் சொல்லும் அளவிற்கு அது சாதாரண விஷயமே இல்லை.நம்மை பொறுத்தவரை அது அசாதாரணம்!!

அமைதியாகவே ஹோட்டல் வந்தவர்கள் அவரவர் அறையில் தஞ்சம்கொள்ள,பிரத்யாவின் மனமும் இறக்கை இல்லாமலே மேலே மேலே பறந்து கொண்டிருந்தது.

அர்வின் பதினைந்து ஆண்டுகளாய் திரையில் மின்னிக்கொண்டிருக்கும்,இளமை மாறாத இளம் கதாநாயகன்.முப்பத்தைந்து வயதில் திருமணம் செய்ய வீட்டாரால் முடிவு செய்யப்பட,அதற்கு தான் நான்காயிரம் பெண்கள் அப்ளிகேஷன் போட்டார்கள்.

பிரத்யாவிற்கும் இன்டர்வியூ கார்ட் வந்திருக்க,வாயெல்லாம் பல்லாக முதல் ஆளாய் அதை சொல்வதற்காக,அவனுடைய அறைக்கே வந்துவிட்டாள்.

“அருண்ண்ண்ண்ண்”உற்சாகமாய் கேட்ட குரலில்,அருணிற்கு சகலமும் பதறியது.அவனிருந்த கோலம் அப்படி!!

உள்ளே நுழைந்தவளின் கண்ணை சந்திக்க வழியில்லாமல் அவசரமாய் ஓடி சென்று உடைமாற்றிவிட்டு வர,இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தன் தலையை நறுக்கென்று குட்டிவிட்டு,

“ஐயோ வலிக்குதே”தலையை தடவியும் கொண்டாள்.

“இருப்போமா? போயிடுவோமா?”முடிவெடுப்பதற்குள் அவனே வந்துவிட்டான்.

கண்ணை எங்கேயோ பதித்துக்கொண்டு”அருண் சிக்ஸ் பேக் ட்ரை பண்ணுடா.அர்வி மாதிரி!!”என்றாள்.

“சிக்ஸ் பேக் வைச்சுக்கலாம்.ஆனால் அர்வின் பேச்சு எதுக்கு வருது”சந்தேகமாய் தான் கேட்டான்.

அரவின் மேல் பித்துப்பிடித்து போய் கிடக்கும் பலரில் இவளும் ஒருத்தி என்று தெளிவாக தெரியுமே! தன் கண் முன்னேயே அவனுடைய போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு,போனிற்கு பலமுறை முத்தம் கொடுத்திருக்கிறாள்.

“லவ் யூ அர்வின்”என்று பலமுறை கூறி இவனை கடுப்பேற்றியிருக்கிறாள்.

பதிலுக்கு இவனும்,ஹாலிவுட் ஹீரோயினை இன்ச் இன்ச்-ஆக வர்ணித்து அவளது காதில் புகை வரவைப்பான்(அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா)..

தன் கையிலிருந்த கார்டை திருப்பி திருப்பி பார்த்தவள்,அதை ஆசையாய் அணைத்துக்கொண்டு,”இன்டெர்வியூ கார்ட் வந்திருக்கு அருண்”எனவும் சந்தேகமாய் பார்த்தான்.

“நீ தான் எங்கேயும் வேலைக்கு போக போறதில்லன்னு சொல்லிட்டு இருந்தியே.திடீர்னு என்ன?”

“ஐயோ அருண்.இது அரவின் மேரேஜ் ப்ரோபோசல்-க்காக ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் அனுப்பினது!! நாலாயிரம் பேர்ல நூறு பேரை தான் செலெக்ட் பண்ணியிருக்காங்க.அதில நானும் ஒருத்தின்னு நினைக்கும் போதே..ஹையோ எனக்கு அப்படியே ஜம்ப் பண்ணிட்டே இருக்கணும் போல இருக்கே”

அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல்,”ஜம்ப் தானே,மேல மாடில வந்து நில்லு.உனக்கு சிரமமே வராமல் நானே கீழ தள்ளிவிட்டுடறேன்”என்றான்.

“கொலைகாரப் பாவி!! இனி தனியா உன் கூட இருக்கவே மாட்டேன்டா”வீர சபதம் செய்துவிட்டு,அதே இடத்தில் தான் இருந்தாள்.

“நீ என்னை ரொம்ப சீண்டற ப்ரத்யா”

“அருண்ண்ண்ண்..இந்த விஷயத்தை உன்கிட்ட  தான் முதல்ல சொல்ல நினைச்சு ஓடி வந்தா,இப்படி கோபப்படறியே!!”புரியாமல் உளறிக்கொட்டிக் கொண்டிருந்தாள்.

“ஹோ..அப்போ நீ இண்டர்வியூ அட்டென்ட் பண்ண போறதுக்கு,நான் வந்து வழியனுப்பி வைக்கணும்னு நினைக்கறியா”

“ச்சே! ச்சே.நிஜமா எனக்கு அந்த எண்ணம் இல்லை.நானே போயிடுவேன்”

“ரொம்ப சந்தோஷம்.இப்போ கிளம்பறியா”

“என்னடா அருண்,இப்படி கோபமா பேசற”

“ப்ரத்யா! நீ என்னை ரொம்ப அதிகமா சீண்டிட்டு இருக்க.உனக்கு  அவனை தான் பிடிச்சிருக்குன்னா போய் தொலையேன்! இங்க வந்து என் உயிரை ஏன் வாங்கற”அடிக்குரலில் சீறவும்,கொஞ்சம் பயந்து தான் போனாள்.

“நீ இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படற?”

“என்னை வெறியேத்தாம போயிடு”எனவும் இவளுக்கும் கோபம் வந்துவிட,

“நீ சொல்றதென்ன! நான் போகத்தான் போறேன்!!”-தரையே அதிரும்படி வேகமாய் வாயில் வரை நடந்தவள்,

“அருண்..ஈவ்னிங் எந்த கலர் ட்ரெஸ் பண்ணிக்க போற..ஸ்கை ப்ளூ கலர் உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்.நானும் அந்த கலர்ல ட்ரெஸ் எடுத்து வைச்சிருக்கேன்”என்றாள்.

இப்போது எரிச்சல் வந்தே விட்டது அருணிற்கு!!

“நீ லூசா,இல்ல லூசு மாதிரியே நடிக்கற லூசாடி!!”

“ஈவ்னிங் பார்ட்டிக்கு எந்த ட்ரெஸ் போடறதுன்னு தானே கேட்டேன்.அதுக்கு ஏன் நீ இவ்வளவு கோபப்படற!! முன்ன மாதிரி நீ இல்லடா.இப்போ எல்லாம் என்னை ரொம்ப திட்டற! அடிக்கடி லூசு சொல்ற..எனக்கு உன்னை பிடிக்கலை.பிடிக்கலை..பிடிக்கவே இல்லை.. ஐ ஹேட் யூ”-அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.(என் செல்லத்துக்கு சோடா குடுங்கப்பா)

“கேட்டுக் கேட்டு காது புளிச்சு போச்சு”எனவுமே,அவனை முறைத்துவிட்டு நகர்ந்தாள்.

“ட்ரெஸ் செலெக்ட் பண்ணி கொடுத்துட்டு போ”-இப்போது இவனும் எங்கோ பார்த்துக்கொண்டு கூற,

‘முடியும்! முடியாது’ எதை சொல்லலாம் என்ற யோசனையிலையே சுவற்றை வெறிக்க,அவளை தள்ளிக்கொண்டு டிரெசிங் அறைக்குள் சென்றான்.

வார்ட்ரோப் முன்னே நிறுத்தி,அவளது தோளில் முகம் பதித்து,”உனக்கு எது பிடிச்சிருக்கு”என்று கேட்க,தொண்டைக்குள் முள்குத்திய உணர்வோடு,

“எ....ன..க்கு..எனக்கு தெரில”என்றவள்,அவனை சட்டென்று தள்ளிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

மெல்ல மூச்சை சீராக்கி,தன் கையிலிருந்த கார்டை பார்க்க,அது அருணின் கையிலிருந்தது(ச்சே! வடை போச்சே!!)

வெற்றிப் புன்னகையுடன்,கண் சிமிட்டி”இனி நீ எப்படி அவனை மேரேஜ் பண்ண போறேன்னு பார்க்கறேன்.best of luck”-கேலி செய்தான் அருண்.

“நீயே உன் விஷ்-ஐ வைச்சுக்கோ!! உனக்கு ஒகே சொல்லிட்டு,அவன் கை கோர்க்க,நான் என்ன லூசா!! போடாங்”என்றவள்,அவன் அவளை எட்டிப் பிடிக்கும் முன்னரே ஓடி சென்றுவிட்டாள்

“எவ்வளவு நேரமா தவிக்க விட்டா! பாவி! ராட்சஸி”விடாது திட்டிக்கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தான்.