என்னவோ மயக்கம்-10

9

ரவீந்தரின் அறிவுரைப்படி தேர்வு எழுதி முடித்த உடனேயே அருண் தனது தாத்தாவிற்கு அழைத்துவிட்டான்.அப்பா இறந்துவிட்டதால் எல்லாவற்றிற்கும் முதலில் தன் தாத்தாவிடமே ஆலோசனை கேட்பான்.அவனது அம்மாவும் அப்படி தான் அவனுக்கு கற்று கொடுத்திருந்தார்.

அருணும் எந்தவிதமான சுற்றலும் இல்லாமல் தொலைபேசியிலையே,தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும்,அவளை திருமணம் செய்துகொள்ள உறுதியுடன் இருப்பதாகவும் வெங்கியிடம் கூற,அவருக்கு இந்த கதை ஏற்கனவே தெரிந்தது தானே!

அலட்டிக்கொள்ளாமல்,”நாங்க பொண்ணை பார்க்கலாமா,இல்லை தேவையில்லைன்னு நினைக்கறியா”அபிப்ராயம் கேட்பது போல,ப்ரத்யாவை அருணுடன் அழைத்து வர மறைமுகமாக உத்தரவிட,தேர்வு எழுதி முடித்த கையோடு அவளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

அமைதியாக காரோட்டிக்கொண்டிருந்தவனை பார்ப்பதும்,பின்பு மொபைலை நோண்டுவதுமாய் சிரமமாய் பொழுதை நெட்டி தள்ளிக்கொண்டிருந்தாள்.

ஒருக்கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்,”அருண்ண்ண்..இப்படி ஒரு வார்த்தை கூட பேசாமல்,எப்படி இவ்வளவு நேரம் தூங்காம டிரைவ் பண்ற”-அதிமுக்கியமான சந்தேகம் கேட்டவளை,சிறு புன்னகையுடன் பார்த்தவன்,

“பழகிடுச்சு”ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு மீண்டும் சாலையில் கவனத்தை பதித்துவிட்டான்.

“ப்ச்ச்”என்ற உச்சுக்கொட்டலோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்..

என்று தான் முழுமனதோடு காதலை ஒத்துக்கொண்டோமோ அன்றிலிருந்து அருணின் செயல்பாடு மாறித்தான் போய்விட்டது என்ற உண்மையை நூற்றிஎண்பதாவது முறையாக நினைத்துக்கொண்டாள்.கிட்டத்தட்ட அருணின்  எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது..பிரத்யாவும் மாறிப்போய்விட்டாள் என்றே எண்ணினான்.

காதலை சொன்ன பிறகு அருணிடமிருந்த விளையாட்டுத்தனம் போய்,அழுத்தமான பாவனை ஒட்டிக்கொண்டது.அப்படியே அதற்கு எதிர்பதமாய் எப்போதும் அழுத்தமாய் இருப்பது போல காட்டிக்கொள்பவள்,முகமுடியை கழற்றி வைத்துவிட்டு அவனோடு மிகவும் இயல்பாக,சொல்லப்போனால் சிறுபிள்ளைத்தனமாக கூட நடக்க ஆரம்பித்துவிட்டாள்..

இருவருக்குமே தங்களிடமிருந்த மாறுபாடு புரியவில்லை.ஆனால் தங்கள் துணையிடமிருந்த மாறுபாடு மட்டும் தெள்ளதெளிவாக தெரிந்து அவர்களை குழப்பிக்கொண்டிருந்ததை என்னவென்று நான் சொல்ல?

ஒருவழியாய் வீடு வந்து சேர்வதற்குள் ப்ரத்யா தூங்கிவிட்டிருந்தாள்.

காவலாளி கேட்டை திறக்கும் சத்தத்தை கேட்டு விழித்தவள்,”அருண்.முதல்ல அத்தையை பார்க்க போகலாம்”என்றவுடன் தலையை ஆட்டி சம்மதம் சொன்னவன்,அரைகிலோமீட்டர் தூரம் தள்ளி சென்று காரை நிறுத்தினான்.

இருவரும் இறங்கி,வலப்பக்கம் இருந்த இருவர் மட்டுமே நடக்கக்கூடிய அளவிலான  சிறு மண்சாலையில் நடக்க தொடங்கினர்..அழகான புல்வெளி நடுவில் ஒரு ஓட்டுவீடு இருக்க,அவளுக்கு முன் சென்று வாயிலில் நின்றுகொண்டவன்,

“என் மாளிகைக்கு தங்களை வரவேற்கிறேன்”என்று வலது கையை நீட்ட,

“இது மாளிகையா?”என்ற கேள்வியெல்லாம் கேட்காமல்,

“நிச்சயம் இது மாளிகை தான்”என்று அவனது வலது கையில் தன் வலக்கையை வைக்க,

மகிழ்ச்சியான உணர்வுடன்,

“ம்மா”என்று கத்தி அழைக்க..

“உள்ள வா கிரி”என்ற சத்தம் மட்டும் கேட்க,அவளை அழைத்துக்கொண்டு உள்நுழைந்தான்.

இரண்டு படுக்கையறை,ஹால்,அளவான சமையலறை என்று சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்த வீட்டை ஆர்வமாய் பார்த்தவள்,சமையலறையில் இருந்த அருணின் அம்மாவை பார்த்தாள்.அம்மாவின் சாயல் தான் அருண் என்று நேரில் பார்க்கும் போது தெளிவாக தெரிந்தது..பார்ப்பதற்கு அருணை விட பதினைந்து வயது தான் அதிகமிருக்கும் என்று எண்ணும்படியான தோற்றம்! மாநிறமாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தார்.

விழியாகலாமல் பார்த்துக்கொண்டே இருந்தவளின் முன் அருண் கையை ஆட்ட,”மாமி ரொம்ப அழகு அருண்”எனவும்,

“மாமி இல்லை அத்தைன்னு சொல்லு”என்று அதட்டியது அருணின் அம்மா வனிதா தான்.

“சரிங்க அத்தை”என்றவள் அவரை அணைத்து கன்னத்தில் முத்தமொன்றை வைக்க,முதலில் திகைத்தாலும்,அருணின் திகைப்பையும் பார்த்துவிட்டு,மகனிடம் கண்ணாலையே அவனுக்கு உத்தரவிட,

“ப்ரத்யா,இதே மாதிரி தாத்தா வீட்ல யார்கிட்டவும் நடந்துக்காதே”என்று அதட்டினான்.

இருவரின் கண் பாஷையை பார்த்தாள் தானே!

“ஓகே.அப்போ அங்க போய் என்ன செய்யணும்,எது செய்யக்கூடாதுன்னும் லிஸ்ட் போட்டு சொல்லிடு”கோபத்தை மறைக்காமல் காட்டிவிட,அருணும் ஏதோ சொல்ல வர,அவனை தடுத்த வனிதா,

“இதப்பாருடாம்மா,நீ நீயாவே இரு.யாருக்காகவும் உன்னை மாத்திக்க வேண்டியதில்ல.அதே நேரத்தில மேல்நாட்டு கலாச்சாரத்தை கொஞ்சம் விட்டுடு..”என்றவர்,

“தங்கம்”என்று குரல் கொடுக்க,சமையல் செய்யும் பெண்மணி,பழச்சாறு கொண்டு வர,அதை இருவருக்கும் எடுத்துக்கொடுத்தார்.

அருண் பிரத்யாவை பார்க்கவேயில்லை.அம்மாவின் முன் இப்படி பேசிவிட்டாள் என்று அவனிற்கு கோபம்.அது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது..

சிறிது நேரமிருந்த அமைதியை கலைத்த வனிதா,”கிரி,தாத்தா உன் விருப்பத்துக்கு மாறி எப்பவும் நடக்க மாட்டார்.இப்போ எது சொன்னாலும்,கோபப்படாமல் அமைதியா புரிய வை.”என்றவரின் முகத்தில் சிறு பதட்டமிருந்தது.

“அத்தே..உங்களுக்கு உங்க மாமா மேல ரொம்ப பயமா”கண்ணை விரித்து கேட்டவள்,அவரின் திகைப்பை பார்த்துவிட்டு பதிலையும் எதிர்பார்க்காமல்,

“அருண் லவ் பண்றதுக்கு காரணமே நீங்க தான்னு நினைச்சிடுவார்னு பயப்படறிங்களா”என்றாள் தெளிவாய்!!

“அருண்,என்னதிது”வனிதா மகனை அதட்ட,

கடுப்பானவன்,”ப்ரத்யா,உன்னோட அறிவை கொஞ்ச நேரத்துக்கு மூட்டை கட்டி வை”என்றான்.

“அப்போ நான் சொன்னது சரி தானே”பாயிண்டை பிடிக்க,அம்மாவிற்கும் மகனுக்கும் சங்கடமாய் போயிற்று..

இருவரின் அமைதியே அவளுக்கு உண்மையை கூறிவிட, “ஒகே அருண்,உனக்காக கொஞ்ச நேரத்துக்கு நான் என்னோட அறிவை உனக்கு கடன் கொடுக்கறேன்.நல்லபடியா அதை யூஸ் பண்ணிக்கோ!!”கேலி செய்ய,

வனிதாவிற்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.கொஞ்சம் ஓவராய் பேசினாலும்,மகன் சொன்னவுடன் கேட்டுக்கொள்கிறாள் என்பதையும் சில நொடிகளிலையே புரிந்துகொண்டார்.

இனியும் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற உணர்வுடன்,”உன்னோட தாத்தா ரொம்ப கோபமா தான் இருக்கார் கிரி.அப்பாவை போல பிள்ளையும் இருக்கான்-னு என்கிட்ட ஒரே சண்டை.நீ உன் விஷயத்தில தெளிவா இருந்தா,அவரை சம்மதிக்க வைச்சிடலாம்”என்றார் பெருமூச்சுடன்!!

இடையே குறுக்கிட்ட ப்ரத்யா,”அத்தே..அப்போ நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டா இந்த வீட்டுல தானே இருப்போம்”என்று கேள்வி கேட்டாள்.

மீண்டும் சங்கடமான அமைதி..

முதல்முறை எல்லாவற்றையும் பிரத்யாவிடம் சொன்னது தவறோ என்று எண்ணினான்.

“ப்ரத்யா,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னேன்”என்றவுடன் வாயை மூடிக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க.நான் உன் தாத்தாவை போய் பார்த்து,நீங்க வந்ததை சொல்லிட்டு வந்துடறேன்”என்றவர் மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட,பெருமூச்சுவிட்டவன்,ப்ரத்யா இருப்பதை மறந்து தனது அறைக்குள் சென்றுவிட,அவனது அனுமதியை எல்லாம் எதிர்பார்க்காமல் இயல்பாய் அவன் பின்னேயே வந்தவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தபடி,

“இப்போ அத்தே,வீட்டு வாசல்ல தானே நிற்பாங்க அருண்.அவங்களை ஏன் கஷ்டபடுத்தனும்.நாமளே போயிருக்கலாம்..இப்போ என்னையும் வெளில லான் பக்கம் உட்கார வைச்சு தானே உன்னோட தாத்தா பேசுவார்”எனவும்,

“எப்படி ஒருத்தரை பார்க்காமலையே,அவங்க இப்படித்தான்னு முடிவு பண்ணிடற ப்ரத்யா?”கேள்வியாய் கோபத்தோடு ஏறிட்டவனை,அலட்டிக்கொள்ளாமல் நேர்பார்வை பார்த்து,

“என்ன,உங்க குடும்பம் மட்டும் தான் என் குடும்பத்து ஆட்கள் பற்றி விசாரிப்பாங்களா! நாங்க விசாரிக்க மாட்டோமா?..அதுவும் நீ எனக்குன்னு முடிவான பிறகு இதெல்லாம் நான் எப்படி தெரிஞ்சுக்காமல் இருப்பேன்..ம்ம்ம்ம்”புருவத்தை உயர்த்தி கேட்க..அந்த அழகுடன் கூடிய அறிவு நிச்சயம் அவனை கவரவில்லை..ஏனோ இன்று அனைத்துமே அவனுக்கு பிடிக்கவில்லை..ஆனால் அவளை பிடிக்காமலும் இல்லை. (ரொம்ப கன்பியூசா இருக்கே!)

அவன் பதில் சொல்லாமல் அமர,அவனது கையை தொட்டாள்.அந்த கணமே அவளது கை விரல்களை தன்னோடு பிணைத்துக்கொண்டவன்,அடுத்து என்ன நடக்குமோ என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டவனாய் உல்லாச மனநிலைக்கு மாறிவிட்டான்.

இருவரிடமிருந்த இடைவெளியை குறைத்து,அவளுடன் ஒட்டி அமர,திகைத்து போனவளாய் தள்ளி அமர்ந்தாள்..இம்முறை அவன் நகரவில்லை..அவளது இடையில் கைவைத்து தன் பக்கத்தில் அவளை இழுக்க...கோழிக்குண்டு கண்ணை மேலும் அகலமாக்கி பார்த்தவள்,அவன் கையை விலக்க முயற்சி செய்தாள்..

மேலும் இறுக்கியவன்,”அதென்ன,உன்னோட அத்தையை பார்த்த உடனே அவ்வளவு பாசமா ஒட்டிக்கிட்ட”-கேட்டவன் அவளை பதில் சொல்ல விடாமல் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்தான்.

வழக்கம் போல அவனுக்கு எதிர்ப்புறமாய் முகத்தை திருப்பிக்கொண்டு,எப்போதும் போல கன்னத்தை துடைக்க எழுந்த அவளின் கையையும் சேர்த்து தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன், அவள் தன்னை சுதாரித்துக்கொள்ளும் முன்னரே தன் பக்கம் திருப்பினான்.

அசந்து தான் போனான்.அவள் கண்களில் அப்படியொரு மயக்கம்..!!

தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் எண்ணமற்றவளாய்,அகன்ற விழிகளை மூடிக்கொண்டு அவன் மேலையே சாய்ந்துவிட்டாள்.

“ப்ரத்யா...”என்ற அவனின் அழைப்புக்கும் பதிலில்லை..இன்னும் ஆழமாய் அவனுள் புதைந்து போகும் அளவிற்கு அவன் நெஞ்சில் அழுந்த முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவளின் ஈர இதழின் ஸ்பரிசம் அவனை ஏதோ செய்ததில்,அவளின் மயக்கம் அவனுக்கும் இடம்பெயர,மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தியவன்..நெற்றியில் இதழ் பதித்து மீழ..திறவாத அவளின் கண்களில் தன்னை தேடி தொலைத்தவன்..உணர்ச்சிப்பெருக்கில் பிடித்த பிடியை விடாமல் இறுக்கிக்கொண்டான்..இந்த நொடி இருவருக்குமே எதிர்காலத்தை பற்றிய பயம் இல்லை..ஏன் எதிர்பார்ப்பு கூட இல்லை.தங்களுக்குள் நிகழும் மாற்றத்தை ஆழ்ந்து அனுபவித்தனர் இருவரும்!

அவனது கைபேசியின் சத்தம் இருவரையும் மீட்க,அவளை தன் கைவளைவினுள் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்கம்மா”

“தாத்தா வர சொல்லிட்டார் கிரி.ப்ரத்யாவை லான்ல என்கூட உட்கார வைச்சுட்டு நீ மட்டும் உள்ள வரணுமாம்”என்றவரின் குரலில் சோகம் மட்டுமே எஞ்சியிருந்தது.

“நான் பார்த்துக்கறேன்மா.அவளை மட்டுமில்ல,உங்களையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறேன்”உறுதியாய் சொன்னவன்,

பிரத்யாவிடம்”எது நடந்தாலும் அது நம்மளோட நல்லதுக்காக தான் இருக்கும் ப்ரத்யா.நீ மட்டும் தயவு செஞ்சு பேசிடாத”கெஞ்சிக்கேட்டு அவளது முறைப்பை பெற்றுக்கொண்ட பின்னரே அழைத்து சென்றான்..

மீண்டும் காரில் பயணித்தவர்கள் சிறிது தூரம் தள்ளி காரை விட்டு இறங்கவும்,ஒருவர் வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு காரை பார்க் செய்ய எடுத்து சென்றார்.

அருண் முன்பே அவளிடம் சொல்லியிருக்கிறான் தான்.இது வீடு இல்லை..அரண்மனை என்று..முகப்பை பார்த்த கணமே அசந்து போனாள்.

இவர்கள் சொந்தத்துக்குள்ளையே திருமணம் செய்யும் பழக்கம் உடையவர்கள் என்பதால்,ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குடும்பமாக பலர் வசித்து வந்தனர்..

இவனின் தாத்தா வெங்காடசலத்திற்கு உடன் பிறந்தவர்கள் நான்கு ஆண்கள்,இரண்டு பெண்கள்..இவர்களுக்கு பிறந்தவர்கள்..அத்தை பெண் மாமா மகன் என்று திருமணம் செய்துகொண்டு இதே அரண்மனையில் வாழ எப்போதும் இங்கே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

விருந்தினர் அறையை தவிர்த்தே ஐம்பது அறைகள் இருக்கும்..அதுவே இவர்களுக்கு போதவில்லை.பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் குடும்பமும் விரிவடைய,இடப்பற்றாக்குறையும்,மனப்பற்றாக்குறையும் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட,ஒருநாள் பெரிய சண்டை வந்து சொத்தை பிரித்துக்கொண்டு போய்விட்டார்கள்.இந்த அரண்மனையை மட்டும் வெங்கி யாருக்கும் கொடுக்க சம்மதிக்கவில்லை.

மற்றவர்களை போல் அல்லாமல்,இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுக்கொண்டதால்,அவரது மகள் பாரதிக்கு தங்கை மகனையை மணமுடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொண்டார்.மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால்,தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணி..இன்றுவரை அதாகப்பட்டது மகன் இறந்து பத்து வருடத்திற்கு மேல் ஆன பின்பும் கூட மருமகளை தாங்கள் இருக்கும் பகுதியில் நுழையவிடவேயில்லை.

அவ்வளவு வைராக்கியமானவர் ரத்த பாசத்தால் அருணை மட்டும் பிறந்த நாளிலிருந்து அவனது அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த நேரங்களில் தன்னுடனே வைத்து வளர்த்தார்.இப்போது பேரனும்,அப்பனைப்போலவே வந்து நிற்க..கோபமெனும் தீயில் தானும் எரிந்து தன்னை சூழ்ந்தவரையும் எரித்துக்கொண்டிருந்தார்..

இன்றும் மாமனார் சொல்லை தட்டாத மருமகளாய்,வெளியில் விருந்தினர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த தாயை கண்ட அருண்,அவரிடமே ப்ரத்யாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்ல..மாமியாரும் மருமகளும் சில நொடி பேச்சுக்களிலையே மனதிற்கு மிகவும் நெருக்கமாக மாறிப்போனதை யாருமே அறியவில்லை.

இந்த வயதிலும் மிடுக்காக கால் மேல் கால் போட்டு கம்பீரத்துடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் பேரனை கண்டதும்,”வாங்க கிரி”என்று மரியாதையுடன் அழைத்தார்..கோபமாம்!!

“இதோ வந்திடறேன் தாத்தா”என்றவன் அவசரமாய் படிகளில் கூட ஏறாமல் லிப்ட் இருக்கும் பக்கம் நகர்ந்து இரண்டாவது தளத்தில் இருந்த தனது அறைக்குள் நுழைந்தவன்..சில நொடிகளிலையே திரும்பி வந்து தாத்தாவின் அருகில் அமர்ந்து,அவர் தோள் மேல் கையைப் போட்டு அவரைப்போலவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர..அதை வெங்கி ரசித்து சிரித்தார்.

அவரின் சிரிப்பு அறைக்குள் இருந்த பாரதிக்கு கேட்டுவிட,முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே மருமகனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவனது தலையில் செல்லமாக கொட்டு வைத்துவிட்டும் சென்றார்.

தாத்தாவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்.அவர் எந்த வழியில் போகிறாரோ,அதை பின்பற்றி போவதே சிறப்பு என்று அறிந்து வைத்திருந்தான்.இல்லையென்றால் நேருக்கு மாறாய் செய்து வைப்பார்..பொல்லாத மனுஷன்!

அதை மெய்ப்பிக்கும் பொருட்டு,”உனக்கு அந்த பொண்ணு செட் ஆகமாட்டா.குடும்பத்து ஆட்கள் சரியில்ல”என்றார் ஆரம்பித்திலையே.

“நான் அவளுக்கு வாக்கு கொடுத்துட்டேன் தாத்தா.என்னால வார்த்தை தவற முடியாது”

“நானும் தான் உன் அத்தைக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.இந்த விஷயம் உனக்கும் முன்னாடியே தெரியும்.அப்படியிருந்தும் நீ இப்படி பேசினா....”முடிக்காமல் நிறுத்திவிட்டார்.

“வேற எந்த விஷயத்துலயும் உங்க பேச்சை மீற மாட்டேன் தாத்தா.இந்த விஷயத்துல என்னை கட்டாயப்படுத்தாதீங்க”என்றவன் தனது மொபைலில் ப்ரத்யாவை உள்ளே வர சொல்லி மெசேஜ் அனுப்ப,அவள் அத்தையும் அழைக்க,எவ்வளவு போராடியும் அவரை சம்மதிக்க வைக்க முடியாமல் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்..எப்படியும் உள்ளே வர பதினைந்து நிமிடங்கள் ஆகலாம்.

தானே அழைத்து வரலாம் என்று அருண் எழுந்திருக்க..அவன் பின்னோடு எழுந்து வந்தவர்,

“அந்த பொண்ணு உன்னை விட மூத்த பொண்ணுடா கிரி”என்றதும் சட்டென்று திரும்பினான்..இதென்ன புது கூத்து!!

கலக்கத்தை காட்டாமல்,”ஸோ வாட்”என்றான்.

கொஞ்சம் கூட அசராமல் வெங்கி,”அருண் இந்த பொண்ணு உனக்கு அக்காடா! நீ அந்த பொண்ணுக்கு தம்பிடா”குண்டை தூக்கிப் போட,வேண்டுமென்றே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுவது போல ஆக்ஷன் செய்து கொண்டிருந்தவனை தாங்கிப்பிடித்த வளைக்கரம்,நிச்சயம் பிரத்யாவோடது இல்லவே இல்லை.

அவள் மிருதுளா!

அருணின் அத்தை மகள்.

“என்ன மாமா.பகல்லயே குரங்கு வித்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க”கலகல சிரிப்புடன் கேட்டவாறே அவனை நேராக நிற்க வைக்க..

“ஹாய் மிருது.நீ இன்னைக்கு காலேஜ் போகலையா”என..

“தாத்தா தான் இன்னைக்கு நீங்க வரேன்னு வீட்டுல இருக்க சொன்னார் மாமா”என்றவளோ அம்சமாய் புடவை கட்டி தேவதையாய் நின்றாள்.

என் பேத்தியை விட..அந்த பெண் எந்த விதத்தில் உசத்தி என்று பார்வையாலையே கேட்டுக்கொண்டிருந்தார்.அவனுக்கும் புரியாமலில்லை..








No comments:

Post a Comment