என்னவோ மயக்கம்-13

13

“பிரத்யுக்ஷா மைக்கேல்”-இந்த பெயரை இணையத்தில் தேடினால் இவளது குடும்ப வரலாறே கிடைக்கும்.இப்போது பிரபலமான விருது வாங்கிய நடிகை என்பதால்,பிரத்யுக்ஷா,பிரத்யா இருவரும் இரட்டை சகோதரிகள் என்பது முதற்கொண்டு எல்லாமே விபரம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.மதுவிற்கு அவ்வளவாக வெள்ளித்திரை அனுபவம் இல்லாததால்,ஆங்காங்கே இதுபோல பேச்சைக் கேட்க நேர்ந்த போதிலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாள்.

அவளுக்குமே ஓரளவுக்கு பிரத்யா-அருண் பிரிவின் காரணம் அவளது சகோதரியாகத்தான் இருக்கும் என்ற யூகம் இருந்தது.மேற்கொண்டு அதைப்பற்றி சிந்திக்கவே அவளுக்கு விருப்பமில்லை என்பதால் கண்டும் காணாமல் விட்டுவிட்டாள்.அதனாலையே தோழிகளின் நட்பு இன்னும் ஆழமாகியது.

அவ்வப்போது உடன் பணிபுரிபவர்கள் யாரேனும் தெரிந்து கேள்வி கேட்டால்,பிரத்யா சில நேரம் சங்கடமாய் நெளிவாள்.பல நேரம் துணிந்து பதில் கொடுத்திருக்கிறாள்.சிலரின் ஆபாச ஆசை வார்த்தைகளும் கேட்க நேர்ந்திருக்கிறது.அதனால் தானோ என்னவோ அருணுடனான வாழ்க்கைக்கு மிகவும் ஏங்குகிறாள் என்று எண்ணி,தோழிக்கு உறுதுணையாக இருந்துவருகிறாள்.

பெரிய பணக்கார குடும்பம் என்றால் அங்கு பிரச்சனையே இருக்காது என்று தான் சிறுவயதில் எல்லாம் நினைப்பாள்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருப்பதை கல்லூரிக்கு சென்ற பின் தான் முழுதாய் உணர்ந்துகொண்டாள்.

இப்போது தனக்கு வந்திருக்கும் தலையாய பிரச்னையை பற்றிய சிந்தனையில் குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள் நடந்துகொண்டிருந்தாள்.

எல்லாம் ஜீவாவின் கைங்கரியம்.

நேற்றைய தினம் மாடியில் காத்து வாங்கிக்கொண்டிருந்தவளிடம் வேண்டுமென்றே வம்பளந்து கொண்டிருந்தான்.மதுவுக்கோ பயங்கர எரிச்சல்!

அதற்கு முக்கிய காரணம்,ஜீவாவுக்கு பிரத்யூ மேல் மதிப்பு இல்லாதது போல இருந்த செய்கை தான்.அவனது வம்புக்கு பதில் கூறாமல்,

“பிரத்யாவை பார்த்து நீங்க ஏன் ஒதுங்கி போறீங்க? அவளை பார்க்கும் போது ஏன் ஒருமாதிரி...அதாவது நீங்க அவளை கீழ்த்தரமா பார்க்கற மாதிரி  எனக்கு ஒரு பீல்..”என்றதும் திடுக்கிட்டான்.

“அப்படியெல்லாம் இல்லையே”தடுமாறியவன்,என்ன நினைத்தானோ..உடனே நிமிர்ந்து நின்று,

“அப்படியே தான்”என்று ஒத்துக்கொண்டான்.

அதுவே மதுவின் சீற்றத்துக்கு போதுமாய் இருந்தது.

“அவ வீட்டுலையே இருந்துட்டு,அவளை பற்றி இப்படி நினைக்கறது அசிங்கமா இல்ல”

“இல்லவே இல்லை..எனக்கு எப்போ அவளோட சிஸ்டர் பற்றி தெரிய வந்துச்சோ,அப்பவே எனக்கு இங்க இருக்கதே பிடிக்கலை.என்னோட அக்காவுக்காக எப்போவோ ஒருதடவை தான் வருவேன்.இப்போ நீ இருக்கறதினால தொடர்ந்து இங்க இருக்கேன்.அவ்வளவு தான்.”

“ஓ..”என்றவள் அதோடு நிறுத்திவிட்டு நகரப்போனாள்.ஆனால் அவன் கையைப்பிடித்து நிறுத்தவும் பட்டென்று தட்டிவிட்டாள்.அவனுக்கு கோபம் வரவில்லை(வந்தால் தான் ஆச்சர்யம்)

“மது,எனக்கு மத்தவங்களை பற்றி கவலையில்ல.நான் உன்னை லவ் பண்றேன்.நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”என்றான் உறுதியான குரலில்!!

“பிரத்யூ மேல தப்பான அபிப்ராயம் இருக்கும் போது,அவ கூட இருக்கற என்மேல ரொம்ப நல்ல எண்ணமோ”கேலியாக கேட்டாலும்,அதிலிருந்த கோபம் புரிய,

“நீ ரொம்ப நல்ல பொண்ணு தான்.நான் விசாரிச்சுட்டேன்.உன்னோட பேமிலிக்காக நீ எவ்வளவு பண்ணியிருக்க..நான் கூட அவ்வளவு பொறுப்பு கிடையாது.இனிமேல் அப்படி இருக்கக் கூடாதுன்னும் முடிவு பண்ணியிருக்கேன்.நீ உன்னோட விருப்பத்தை மட்டும் சொல்லு.மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கறேன்”என்றவனிடம் பேசக்கூட விருப்பமில்லாமல் வந்துவிட்டாள்.

இப்போதும் அவன் சொன்னதற்கு பதில் சொல்லும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை.இருந்தாலும் ஒருவித டென்ஷனில் சுற்றிக்கொண்டிருந்தாள்.தலைவலி வேறு அதிகமாய் இருக்க,டீ குடித்தால் சரியாகிவிடும் என்று எண்ணியவள்,தன் அறையிலிருந்து,சமையலறைக்கு சென்றாள்.

உள்ளே ஜீவாவின் சத்தம் கேட்க,”மறுபடியும் இவனா”அலுப்புடன் திரும்பி நடக்க துவங்கிய போது,இவளது பெயர் அடிபட சட்டென்று நின்றுவிட்டாள்.

“அக்கா,நீ தான் மதுகிட்ட பேசி சம்மதம் வாங்கணும்.நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காம பேச்சை டைவேர்ட் பண்ணிடறா.எனக்காக நீ பேசிப் பார்.ப்ளீஸ்”என்று கெஞ்ச,

“ஜீவா,நீ எல்லா பொண்ணுங்க கூட பழகற மாதிரி மதுவை நினைக்காதே.உண்மையாவே சீரியஸா அவளை மேரேஜ் பண்ணிக்கற ஐடியா இருந்தா மட்டும் சொல்லு.மேல ப்ரோசீட் பண்ணலாம்.இல்லைன்னா ஆளை விடு”என்றவள் தன் வேலையில் தீவிரமாக,

“அக்கா,பார்க்கற எல்லா பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.எனக்கு மதுவை மட்டும் தான் பிடிச்சிருக்கு.உன்னால முடியுமா,முடியாதா..அதை மட்டும் சொல்லு”என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன் வாயிலில் நின்றிருந்த மதுவை பார்த்ததும் திகைத்தவன்,பின்பு சந்தோஷமாய்..

“நீயே கேட்டுட்டியா,நம்மளை பற்றி தான் பேசிட்டு இருந்தேன்”என்றவனை அற்பமாக பார்த்தவள்,

“நானும் உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கேன்.அதுவும் உங்க அக்காவே உங்களுக்கு பொண்ணுங்களோட பழக்கம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க.ஒரு பொண்ணு பின்னாடி அவளோட அனுமதியில்லாம சுத்தறது,அந்த பொண்ணை அன்கம்பர்ட்டபிலா பீல் பண்ண வைக்கறது கூட பாலியல் வன்முறை தான்..அப்போ நீங்க கெட்டவர்னா...உங்களோட அக்காவும் கெட்டவங்கன்னு அர்த்தமா”பட்டென்று கேட்டவளை..அடிக்க கையை ஓங்கியே விட்டான்.

அவளது அசையாத பார்வையில் கையை இறக்கியவன்,அதிர்ந்து போய் நின்றிருந்த அக்காவை வெறித்துப் பார்த்தவன்,

“நீயெல்லாம் பொண்ணாடி,இப்படி வார்த்தையை சவுக்கு மாதிரி அள்ளி வீசற”கோபமாய் இரைந்தான்.

கொஞ்சமும் அசராமல்,”உங்க அக்காவை சொன்னா மட்டும் கோபம் வருதில்ல.அப்போ என் பிரண்டை மட்டும் ஏன் அவ அக்காவை வைச்சு அப்படி பார்க்கறீங்க.உங்க உடன் பிறப்புக்கு ஒரு நியாயம்.அவளுக்கு ஒரு நியாயமா? ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும்,கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாத நீங்க விமர்சிக்க என்ன உரிமை இருக்கு”அழுத்தமாய் கேட்டதில்,கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல்..

“ச்சே”என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

இன்னமும் அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்த இந்துவை பார்க்கவே மதுவிற்கு பாவமாய் இருந்தது.

“சாரி இந்துக்கா..நான் உங்க தம்பிக்கு புரிய வைக்கறதுக்காக அப்படி பேச வேண்டியதா போச்சு.என்னை மன்னிச்சிடுங்கன்னு சாதாரணமா சொல்லிட முடியாது.வேற வார்த்தையும் தெரியல”என்றவளுக்கோ கண்ணில் நீர் முட்ட..அதை கவனித்த இந்துவுக்கோ மனம் இளகத்தான் செய்தது.

தன்னை கொஞ்சம் தேற்றிக்கொண்டவள்,”பரவாயில்ல மது.ஆனால் இனி யாரையும் இப்படி பேசிடாதே..என் தம்பி ஏதோ தப்பா பேசியிருக்கான்-னு தெரியுது.அதுக்காக அவனை தேர்ட்-ரேட் பொறுக்கி அளவுக்கு விமர்ச்சிருக்க வேண்டாம்”என்றவள் கனத்த மனத்துடன் காயை வெட்ட துவங்க,மதுவுக்கோ குற்றவுணர்ச்சி அதிகரிக்க துவங்கியது.

இனி யாரிடமும் இப்படி பட்டென்று பேசவும் வேண்டாம்..இப்படி வருத்தப்படவும் வேண்டாம் என்ற ஞான உதயம் உதிக்க..சங்கடமான மனநிலையில் வெளியே வந்தவள் எதிர்ப்பட்ட பிரத்யாவின் அலங்காரத்தில் அசந்து தான் போனாள்.

“வாவ்,பிரத்யா..இன்னைக்கு என்ன விசேஷம்..சும்மா கலக்கற”என்று மது கேட்க,சத்தம் கேட்டு வெளியே வந்த இந்து,

  “பிரத்யா,ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னை இப்படி பார்க்கறேன்.கழுத்தில மட்டும் வேற செயின் போட்டுக்கயேன்.உன்கிட்ட தான் நிறைய கலெக்ஷன் இருக்கே.ஏன் எப்பவுமே இதையே போட்டுட்டு இருக்க?”எனவும்,

    “இது அருண் கொடுத்தது”என்றாள்.

“அதுக்காக வேற எதுவும் போட்டுக்கக் கூடாதா என்ன?”என்றவள் தன்னறைக்கு சென்று பிரத்யாவிற்கு வாங்கி வைத்திருந்த,அவளுக்கு மிகவும் பிடித்த பிளாட்டின செயினை எடுத்து வந்து கழுத்தில் மாட்டியும் விட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுவின் முகத்தில் புன்னகை மட்டுமே..அவளிடம் பொறாமை என்ற பேச்சிற்கே இடமில்லை..இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ அவளிடம் கற்றுக்கொள்ளலாம்.

மது எதையும் வாங்கிக்கொள்ளமாட்டாள் என்று பிரத்யாவிற்கு தான் தெரியுமே!! அதனாலையே இந்துவை மறுக்க முடியாமல்,”நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்-க்கா.மதுவை எங்கேயாவது கூட்டிட்டு போங்க.மாமா வேலைக்கு இன்டர்வியூக்கு கூப்பிடற மாதிரியும் தெரியல.என்னன்னு விசாரிச்சு சொல்லுங்க”என்றவள் பூஜையறை சென்று வணங்கிவிட்டு காரை நோக்கி சென்றாள்.

அவளது செய்கை இந்துவிற்கு விசித்திரமாக இருந்தது..ரொம்பவும் விசேஷமான நாட்கள் தவிர மற்ற நாட்கள் எல்லாம் பூஜையறை பக்கம் போகவே மாட்டாள்.

“இன்னைக்கு இவ பிறந்த நாள் கூட இல்லையே”வாய்விட்டு புலம்பும் இந்துவின் குரல் கேட்டும் பதில் சொல்லாமல்,டிரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தானே கோவிலுக்கு தனியாக புறப்பட்டு சென்றாள்.

கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருக்க,அம்மனை வணங்கிவிட்டு வலதுபுறமாய் இருந்த கோவில் பிரகாரத்தில் அமர்ந்தாள்.

கோவிலுக்கு வரும் பழக்கத்தை அவளுக்கு கற்றுக்கொடுத்ததே அருணின் அம்மா வனிதா தான்.

“எப்பவும் இல்லைன்னாலும்,நல்ல நாளுக்காவது கோவிலுக்கு போகணும் பிரதீ”என்பார்..இவளை செல்லமாய் பிரதீ என்று அவர் அழைத்ததிலையே அம்மணி டோட்டல் பிளாட்.எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் பெரியம்மாவிடமிருந்து மாறுபட்டு,அருணுக்காகவே தன்னிடம் பாசமாய் பழகும் அவர் மேல் இவளுக்கு அதிகப்படியான மரியாதை கலந்த பாசம் இருந்தது.அதனாலையே அவர் சொல்வதையெல்லாம் தட்டாமல் செய்துவிடுவாள்.

அவரின் நினைவோடையே கண்மூடி அமர்ந்திருக்க,”பாப்பா..நீ அருண் கூட சுத்தின புள்ளை தான”என்ற குரல் கேட்க திடுக்கிட்டு கண் விழித்தாள்.

எதிரில் அருணின் மாமா கந்தன் நிற்க,”சித்தப்பா நீங்களா..நீங்க எப்படி இங்க”சந்தோஷத்தில் படபடப்போடு கேட்டாள்.

“என்ற மருமவனுக்கு இங்க தான் வேலை கிடைச்சிருக்கு.ஜோதி பிள்ளையும் கூட இங்க தான் இருக்கு.கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.அருண்கிட்ட விலாசம் கேட்டப்போ தான் எல்லாம் சொன்னான்.இருந்தாலும் அந்த கெழவனுக்கு இம்புட்டு ஏத்தம் ஆகாது”என்று நொடிக்க,சிரிப்புடன்,

“சித்தப்பா அவரை விடுங்க.ஜோதி இப்போ எப்படி இருக்கா”பேச்சை திசை திருப்ப,

“ஆம்பளப்பிள்ள பிறந்திருக்கு.ஒரு வயசு ஆச்சு.முன்னவே கல்யாணம் ஆகியிருந்தா இப்போ பிள்ளைக்கு நாலு வயசு ஆகியிருக்கும்”என்று பெருமூச்சுவிட,சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

கந்தன்-இவர் பாம்பா பழுதா என்று அறிய முடியாத ரகம்..எக்காரணத்தைக்கொண்டும் இவரிடம் முகம் சுழித்துவிட முடியாது.பேசியே ஆளை கொண்டுவிடுவார்.

அதனால் தான் எல்லாம் தெரிந்திருந்தும்,இங்கீதம் இல்லாமல்’அருணோட சுத்தின பிள்ளை’என்று மரியாதையில்லாமல் சொன்ன போது கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

மரியாதை நிமித்தமாய் அவரை வீட்டிற்கு அழைக்க,”ஊர்ல வேலை நிறைய கெடக்கு பாப்பா.ரயிலுக்கு நேரமாச்சு.இன்னொரு நாள் வாரேன்.அதுக்கு முன்னாடி அருணோட தாத்தாவை பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டா தான் என் மனசு ஆறும்.கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லதே நடக்கும்”என்று ஆசீர்வதித்துவிட்டு செல்ல...அவரது வார்த்தை பலிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

இன்றைய நாளின் முக்கியத்துவமும்,அருண் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான் என்ற எண்ணத்துடனும்..கண்களை மூடி அமர்ந்தாள்..


எண்ணங்களோ முதல்முறை கந்தனை பார்த்த நாளையும்,அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் நோக்கி பயணிக்க...வீட்டிற்கு வர நேரமாகும் என்று பெரியம்மாவிற்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு,ஓய்வாய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

நினைவுகளோ அவன் வசம்!!



No comments:

Post a Comment