என்னவோ மயக்கம்-6




காதலர் தின கொண்டாட்டம் உற்சாகமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.அரங்கம் முழுக்க உற்சாக சத்தம் காதை கிழிக்க,ஜோடி ஜோடியாய் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் கையில் உற்சாக பானத்தோடு,பல வண்ண நிறத்தில் சிறிய கொடியும்,அதில் காதல் பற்றிய வித விதமான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.

அதில் மட்டுமல்ல!! அந்த ஜோடிகள் அணிந்திருந்த டி-ஷர்ட்டிலும் காதலை போற்றும் வித்தியாசமான வாசகங்கள் தாம்!!

ஆரவாரத்துடன் கத்திக்கொண்டு,காதலனை உற்சாகப்படுத்தியபடி இறுகக் கட்டிக்கொண்டும்,பைக்கில் ஏறி நின்று சாகசம் செய்துகொண்டும் தங்கள் மகிழ்ச்சியை பெண்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஜோடிகளுக்கு கொஞ்சமும் குறையாமல் அருணும் பிரத்யாவும் ஆரவாரத்துடன் முதற்கட்ட ரேசில் பங்கேற்றிருந்தனர்.

பிரத்யாவிற்கு பிங்க் கலர் பிடிக்கும் என்பதால்,அருணும் அதே கலரில் ஆடை அணிந்து,சன் கிளாசோடு செம ஸ்மார்ட்டாக இருந்தான்..அவன் ஹெல்மெட் அணிந்து பைக்கை செலுத்திக் கொண்டிருந்ததால்,அவனது சன் கிளாஸ்  இப்போது பிரத்யாவின் கண்களுக்கு இடமாறியிருந்தது.

“யாஹூஊஊஊஊஊஊ”என அவள் கத்திய பேரிரைச்சல்,

“இன்னும் கொஞ்சம் வேகமா போ அருண்”அவனது இடுப்பைக் கட்டிக்கொண்டு உற்சாகமாய் கொடுத்துக்கொண்டே வந்த கமென்ட்கள்..அருணின் காதல் உணர்வை அதிகமாய் தூண்டியதில்,பைக்கை தடுமாறாமல் செலுத்த பெரும்பாடுபட்டான்.

ஒருக்கட்டத்தில் அவள் இம்சை தாங்காமல்,பைக்கை நிறுத்தி,”அடங்குடி”என்று அதட்டவே,முறுக்கிக்கொண்டு,பைக்கின் நுனியில் தள்ளி அவள் அமர்ந்துகொண்டாள்.

அதுவும் பொறுக்காமல் அவன் தன் வேகத்தைக் கூட்ட,இப்போது சத்தமில்லாமல் அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.இப்படியொரு ஆனந்தத்தை அனுபவித்ததில்லை என்று மனம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது.அடங்க மறுத்த ஆசை எண்ணங்களை அடக்க முடியாமல்,அவனை இன்னும் நெருங்கிக் கட்டிக்கொண்டு இம்சை செய்தாள்..

‘இன்று ஏன் இப்படி இருக்கிறாள்’புரியாத நிலையில்,தடுமாற்றத்துடனே போட்டி நடக்கும் இடத்திற்கு மூன்றாவது ஆளாய் வந்துவிட்டான்.

தயாராய் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்,”இது காதலர்களுக்கான இடம்.அப்போ இது உங்க ஏரியா!! இறங்கி கலக்குங்க.போட்டிக்கான விதிமுறை ஒன்றே ஒன்று தான்.எந்த இடத்திலையும் உங்க லேடி பார்ட்னரை,நீங்க கீழ இறக்கி விடவே கூடாது”என்றவன்,

“காலம் முழுக்க சுமக்க வேண்டிய அழகான சுமை”-கண்ணடித்துவிட்டு,

“வின் பண்றவங்களுக்கு ஒரு பெரிய கிப்ட் இருக்கு..அது என்னன்னா..அது என்....னன்....னா”ஆர்வத்தை தூண்டிவிட்டு,

“மூன்று நாள் கப்பிள்ஸ் எங்க ஹோட்டல்ல ஸ்டே பண்ணலாம்.நோ காஸ்ட்! எல்லாமே ஃப்ரீ..ஃப்ரீ..ஃப்ரீ!! என்ஜாய்”என்றதற்கும் கூச்சல் போட்டார்கள்(ரூம் ரெடி பண்ணி கொடுக்கறான்.. நம்ம ஊர்ல இதுக்கு பேர் வேறையாச்சே..!!)

போட்டி பற்றிய சிறு குறிப்பு-காதலன் தன் காதலியை முதுகில் தூக்கி சுமந்து கொண்டு ஓட வேண்டும்.அரைகிலோமீட்டர் கடந்த பிறகு நீச்சல் குளம் இருக்கும்.அதில் விழுந்து நீந்தி,அதிலிருந்து எழுந்து சென்றால்,கால் கிலோமீட்டர் தூரத்தில் தக்காளி சாஸ் நிறைந்த தொட்டி இருக்கும்.அதில் மூழ்கி எழுந்து,சிறிது தூரம் ஓடினால், ஜில்லிப்போடு கூடிய நீர்த்தேக்கம் இருக்கும்..அதையும் கடந்து முதல் ஆளாய் வந்தால் வெற்றி உறுதி!!

எல்லா நிலைகளையும் தட்டுதடுமாறி கடந்து விடுபவர்கள்,கடைசியில் ஜில்லென்ற நீரில் குதித்த பின்னர் வாய்ப்பை தவறவிட்டுவிடுவார்கள்..

குளுகுளு தண்ணீர்!! வெடவெடத்துப் போய்விடும் உடல்!!  உடல் தன் கட்டுப்பாட்டை இழக்கும் சமயத்தில்,சில நேரம் சிலர் பொது இடமென்றும் பாராமல் ப்ரீ ஷோ காட்டுவார்கள்!!

சுழழும் கேமரா அத்தனையும் படமெடுத்துக் கொண்டிருக்கும்.அதை பற்றியெல்லாம் என்ன கவலை? அவர்களின் இளமை துள்ளல் எதைப் பற்றியுமே கவலைப்பட அனுமதிப்பதில்லை. இது ஓர் மாய லோகம்!! மயக்கத்துக்கு மட்டுமே இடமுண்டு!! தயக்கத்திற்கு இடமில்லை...இடமேயில்லை.

நிகழ்ச்சி தொகுப்பாளரின் விரிவுரையை கேட்டதும் பிரத்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

“அருண்”-அவன் கையை சொரிந்துவிட்டு,

“இவன் என்னவோ சொந்தமா யோசிச்ச மாதிரியே எப்படி பில்ட்அப் கொடுக்கறான் கவனிச்சியா!! ரெண்டு மூணு வெளிநாட்டு ஷோவோட அப்பட்டமான காப்பி! தக்காளி சாஸ் வேணா,இவன் டீம் யோசிச்சிருக்கலாம்.மத்ததெல்லாம் நானே நெட்ல பார்த்திருக்கேன்”என்றாள்.

“அப்போ இந்த ஷோவையும் நீ பார்த்திருக்கணுமே!! லிப் டூ லிப்,முகம் விலக்காம,எவ்வளவு நேரம் கிஸ் பண்றாங்கன்னு டைம் நோட் பண்ற ஷோ”

“போடா இடியட்.நீ பொய் பொய்யா சொல்லிட்டு இருக்க.இப்படியெல்லாம் ஒரு ஷோவே இல்லை”-இருந்திருந்தால் பார்த்திருப்பேன் என்ற தினுசில் தான் அவளது பதில் இருந்தது.

“அப்போ நீ நிஜமாவே பச்சை மண்ணுன்னு ஒத்துக்கறேன் ப்ரத்யா”நமட்டு சிரிப்புடன் சொல்லவே,அவன் நம்பாமல் கிண்டலடிக்கிறான் என்று தவறாக புரிந்துகொண்டவள்,அவனது கையிலிருந்து தன் கையை பிரித்தாள்.

சில வினாடிகள் யோசித்திருப்பாள்.அதற்கு மேல் அங்கில்லாமல் மெல்ல நகர,அவளது அசைவை உணர்ந்தவன்,கூட்டத்தின் நடுவில் இரைச்சலின் ஊடே,”நாம தான் முதல் செட் போறோம்.நீ எங்க போற”கொஞ்சம் சத்தமாகவே கேட்க,

“எ..எனக்கு பீரியட்ஸ் டேட் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்”-அவனது முகம் பார்க்காமல் கூறிவிட்டு விலக,நொடி கூட பொய் என்று நினைக்கவில்லை.

“ரொம்ப பெயினா இருக்கா”அக்கறையாய் கேட்டவன்,போட்டியில் பங்கெடுக்கும் ஆசையை விட்டுவிட்டு,அவளது கையை ஆதரவாய் பிடித்துக்கொண்டு,கூட்டத்திலிருந்து லாவகமாய் அவளை தன் கைவளைவுக்குள் வைத்தபடியே வெளியே வந்தான்.

தன்னுடைய கேள்விக்கு பதில் வராததை உணர்ந்தவன்,”என் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் ஹாஸ்டல்க்கு போ ப்ரத்யா”என்றான் பரிவோடு!!

“உன்னோட அம்மாவுக்கு யாரும் சொல்லிட்டாங்கன்னா!!”

“சொல்லிட்டா மட்டும்?”-என்ன நடந்துவிடும் என்பது போல கேட்க,

“நான் வரலை அருண்.என் ரூம்-க்கே போறேன்.உன்னோட மூட் வேற ஸ்பாயில் ஆகிடுச்சு.சாரி”என்றாள் உண்மையான வருத்தத்துடன்!

“இதுல என்ன இருக்கு.ஜஸ்ட் கேம் தானே! நெக்ஸ்ட் டைம் மேரிட் கப்பிள்(couple) ஈவென்ட் நடக்கும் போது பார்த்துக்கலாம்”என்றவனுக்கு பதில் கொடுக்காமல் அவன் தோளில் சாய்ந்தபடியே பயணத்தை தொடர்ந்தாள்.

மனதில் மட்டும்’இத்தனை சீக்கிரமாய் திருமணம் செய்துகொண்டு அப்படி எதை சாதிக்கப் போகிறோம்’என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.

கொஞ்ச நாள் காதலர்களாக நாட்களை கடத்துவோம் என்ற யோசனையின் ஊடே..நீ இங்கே! நான் அங்கே!! என்பது போன்ற வாழ்க்கையை வாழவும் முடியாதென மனசாட்சி குரல் கொடுக்க,ஒரு முடிவுக்கும் வராமல் குழம்பி போனவளின் உடல்நிலை வேறு படுத்தி எடுத்தது.

இன்று அவளுக்கு பீரியட்ஸ் முதல் நாள் தான்.ஏனோ தனியாய் இருக்க மனம் பயந்தது.அருணின் ஆசையையும் கெடுக்கக் கூடாது என்றே வந்தவள்,அவனின் சிறு சீண்டலில் சுணங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டாள்.

ஹாஸ்டல் வந்த பின்பும் இயல்பு நிலைக்கு திரும்பாமல்,அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் கூட விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டாள்.மற்ற தினங்களாய் இருந்திருந்தால்,அருணிற்கு கோபம் வந்திருக்கும்.இப்போது அவளது உடல்நிலை சரியில்லை எனும்போது,இயல்பாய் அதை எடுத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு வந்துவிட்டான்.

காவலாளி கேட்டை திறந்துவிட,கொஞ்சம் ஏமாற்றமான மனநிலையிலையே வீட்டிற்குள் நுழைந்தவன்,எதுவும் செய்ய தோன்றாமல் கட்டிலில் விழுந்தான்.

திடீரென்று ஒலித்த அலைபேசியின் சத்தத்தில் அதை எடுத்தவன்,தெரியாத நம்பரில் இருந்து,ஏதோ வீடியோ வந்திருப்பதை பார்த்து,யோசனையில் முகம் சுருக்கினான்.

அடுத்தடுத்து சில வெப்சைட்களின் முகவரியும் வந்து கொண்டிருக்க,அவனது கை தன்னாலையே வீடியோவை ப்ளே செய்தது.(வயசு அப்டி)

ஒரு பெண்ணின் முகமும்,ஆணின் முகமும் மிகவும் நெருக்கமாய்..இதழோடு இதழ் பொருத்தியபடி...மிகவும் காதலாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆணின் முகம் மட்டும் முதலில் தெளிவாய் தெரிய,அதுவும் அயல்நாட்டவன் என்பது அவனது நிறத்திலும்,வீடியோ எடுக்கப்பட்ட இடத்தையும் பார்த்து புரிந்துகொண்டவன்,யார் இதை தனக்கு அனுப்பியிருப்பார் என்ற யோசனையிலையே அதை சில நொடி பார்த்த பின்பு தான் அவனுக்கு முழுதாய் புரிந்தது..அது ஒரு ரொமாண்டிக் வீடியோ!!(இதுக்கு மேல விளக்கம் வேணுமோ!)

புரிந்த போதும் கூட அவன் அதிரவில்லை..ஆனால்,மெல்ல மெல்ல அந்த ஆணின் கையில் நெளிந்து குழைந்து கொண்டிருந்த பெண்ணின் முகம்,மெல்ல மெல்ல தெளிவாய் தெரிய...”நோஓஓஓஓ”என்று அலறியபடியே கீழேவிட்டான்.

அதிலிருந்தது பிரத்யாவின் முகம்!!

போன் கீழே விழுந்ததில் சிதறவில்லை..இன்னும் கொஞ்சம் வேகமெடுத்து வீடியோ அலற ஆரம்பித்ததில்,பிரம்மையில் இருந்து வெளிவந்தவன்,அருவருப்பில் முகம் சுழிக்க,தன் ஷூவாலையே போனை போட்டு மிதித்தான்..அது சில் சில்லாய் நொறுங்கும் வரை!!

அத்தனை வெறி தாண்டவமாடியது அவன் முகத்தில்!

அவனது முயற்சி வெற்றி அடைந்த உடனே,கைகளை தலைக்கு கோர்த்தபடியே,மடிந்து அமர்ந்தான்.அவனையும் மீறி கண்ணில் நீர் துளிர்த்திருந்தது.

“இருக்காது! இப்படி இருக்கவே இருக்காது”அறையே எதிரொலிக்கும்படி கத்தியவனின் இதயத்துடிப்பு சீராகவே சில நொடிகள் பிடிக்க,அதுவரை அப்படியே அமர்ந்திருந்தவனின் வாய் திரும்ப திரும்ப,”இருக்காது”என்பதையே உச்சரித்துக் கொண்டிருந்தது.

கால் வலித்ததில் அப்படியே அமர்ந்தவன்,”யாரோ! யாரோ வேணும்னே இப்படி அனுப்பியிருக்கணும்..வேற பொண்ணோட முகத்தில ப்ரத்யா முகத்தை எடிட் பண்ணியிருக்கணும்..ஆமாம்.அப்படித்தான்.அப்படித்தான் இருக்கும்.அப்படித்தான் இருக்கணும்”என்று தான் நினைத்தானே தவிர தவறாய் நினைக்கவேயில்லை.

கொஞ்சம் மனம் தெளிவாக,உடனடியாக தன்னிடம் இருந்த இன்னொரு போனில்-இருந்து பிரத்யாவிற்கு அழைத்தான்.

அப்போது தான் தூங்க ஆரம்பித்திருந்தவள்,அவனின் முதல் அழைப்பிலையே எடுக்க,”ப்ரத்யா! நான் ஹாஸ்டல்-க்கு வெளில வெயிட் பண்றேன்.நீ வந்துடு”கட்டளையாகவே கூற,

“இருட்டிடுச்சே அருண்! நாளைக்கு பார்க்கலாம்.வார்டனை சமாளிக்கறது கஷ்டம்”

“இப்போ உன்னால வர முடியுமா? முடியாதா?”

வார்த்தைகள் தெறித்து விழுந்த வேகத்தில் கோபமாய் இருக்கிறான் என்று புரிய,உடனடியாய்”எப்படியாவது சமாளிச்சுட்டு வர்றேன்.இது தான் லாஸ்ட் டைம்.இனி இப்படி கூப்பிடாதே”உத்தரவாய் சொல்லிவிட்டு அவள் வெளியே வர இருபது நிமிடம் பிடித்தது.

அதுவரை அருணின் மூளை படுவேகமாய் சிந்தித்து,கோபமாய்,சில நேரம் கொடூரமாய் சிந்தனைகளை வழிநடத்தி சென்றதில்,அருண்.. அவன் அவனாகவே இல்லை..எந்த ஒரு ஆணின் நிலைமையும் இந்த நேரத்தில் இப்படித்தானே இருக்கும்!!

ப்ரத்யா கேட் அருகே வந்த உடனே அவசரமாய் அவள் கைபிடித்து அழைத்து வர,வாட்ச்மேன் ‘இதெல்லாம் எனக்கு சகஜம்’என்பது போல கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.

அருகிலிருந்த மரத்தின் அருகே அவளை நிறுத்தியவன்,அவளது கையை விடுவிக்காமல்,”லிசன் ப்ரத்யா.உனக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா”என்றதுமே இடது கையை வாய் மேல் வைத்து சிரித்தாள்.

“எதிரிங்களா? எனக்கா!! இதை கேட்க தான் வர சொன்னியா”

“நிலைமை புரியாமல் பேசிட்டு இருக்காதே! முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

இடது கையால் முகத்தில் இருந்த முடியை சுருட்டியவாறே சில நொடிகள் யோசித்துவிட்டு,”நான் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கர் இல்ல அருண்! நான் யார் கூடவும் சண்டை கூட போட மாட்டேன்.பிரண்ட்ஸ்கிட்ட கூட அப்டி தான்! நீ ஏன் இதை எல்லாம் கேட்கற”-விளையாட்டுத்தனமாகவே அவள் கேட்க,

“நத்திங்”என்றவன்,அவளிடம் சொல்லாமலையே செல்ல முனைய,

அவன் கையை பிடித்தவள்,”அருண்! எதுவானாலும் சொல்லிடு! சுத்தி வளைச்சு பேசிட்டு,நீ உன்னை குழப்பிக்காதே! என்ன விஷயம்”அழுத்தி கேட்டதில்..அருணிற்கு மறைக்க தோன்றவில்லை.

அதை விட அவளுக்கும் இது தெரிய வேண்டுமென்றே நினைத்தான்.இது ஒன்றும் மறைக்க வேண்டிய காரியமில்லை.ரவீந்தரிடம் கூறி ஆக்ஷன் எடுக்கவும்,இவளிடம் சொல்வது அவசியமாகப்படவே,

தன் கையிலிருந்த அலைபேசியில் தன் பழைய எண்ணிலிருந்து,வாட்ஸ்அப் செயலியை திறந்து,அதில் வந்திருந்த வீடியோவை காட்டினான்..

ஆரம்ப காட்சியில் அதிர்ந்து போனவள்,பின்பு சிரித்தாள்.

“ஹே..யூ..”வார்த்தை வராமல் தடுமாறியவள்,

“இந்த சீன் தான் டெய்லி பார்க் பக்கம் பார்க்கறோமே! இதை போய்..”என்று சிரிப்புடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் மெல்ல மெல்ல மாறி..அதிர்ந்த பாவத்துடன் அருணை நோக்கின!

கையிலிருந்த போன் தவறி விழ,”இ..இ..இது எப்படி உனக்கு கிடைச்சுது”என்றாள்.

கேள்வியின் அர்த்தம் புரியாமல்,அல்லது புரிந்துகொள்ள தோன்றாமல்,அவளுக்கு தான் இருக்கிறோம் என்று உணர்த்தும் பொருட்டு,

“ரிலாக்ஸ் ப்ரத்யா.இது எவனோ நம்மை பிரிக்க செஞ்ச வேலை..இதெல்லாம் நான் நம்பலை”என்றான் அவளது தோளை அழுத்திபிடித்தபடி!!

என்ன நினைத்தாளோ!! அவளது உடல் விறைக்க ஆரம்பிக்க,அவனது கையை தட்டிவிட்டவள்,தன் தைரியத்தை திரட்டி,”இ..து..இது..”என்று திணறியவள் மூச்சை இழுத்துப்பிடித்து,

“என்னைக்கு இருந்தாலும் உனக்கு தெரிய வேண்டியது தான்..இந்த வீடியோ பொய் இல்லை..இதில இருக்கவன் நேம் மைக்..அ..”எங்கோ பார்த்துக்கொண்டு..அடுத்து என்னவோ சொல்லப் போக..

தன் இரு கைககளையும் இறுக மூடி பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டவன்,”அப்போ இது எல்லாமே உண்மை! அப்டி தானே?”கண்களை கூர்மையாக்கி,கோபத்துடன் கேட்கவே,மிரட்சியில்..அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே..

“எனாஃப் ப்ரத்யா..முடிஞ்சு போச்சு..எல்லாம் முடிஞ்சு போச்சு!! இனி நான் உன்னை பார்க்கவே போறதில்லை. ஐ ஹேட் யூ.என்னைக்கும் என் முகத்தில முழிச்சிடாதே.மீறி பார்த்தேன்..உன்னை கொன்னுடுவேன்”என்றவன் விடுவிடுவென்று சென்றுவிட்டான்..

அங்கிருந்தால் அவளை கொன்றுவிடுவோம் என்று பயந்தே அங்கிருந்து நகர்ந்தான்..அவளை விட்டும் அந்த நொடி விலகினான்!!


No comments:

Post a Comment