kaanum yaavum neeyaaga-18

 

அத்தியாயம் 18

 

 விஷ்வா வெளியே கிளம்புவதற்கு தயாராக அறையை விட்டு வெளியே வரவும்,”எங்க கிளம்பிட்ட ராஜா?”என்று கேட்டார் ராணி.

 

வீட்டுக்குள்ளையே இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா..அதான் வெளில எங்கேயாவது போகலாம்னு பார்க்கறேன்எனவும்,


விஷ்வா வெளியே செல்வது பிடிக்காத ராணி,”பக்கத்துல தான போற ராஜா..பைக் எடுக்க வேண்டாம்..நடந்தே போஎனவும்,

 

ரொம்ப தூரத்துக்கு நடக்கற அளவுக்கு,காலுக்கு இன்னும் பலம் வரலம்மா..பைக் எடுத்துட்டு போறேன்..அது தான் சரியா இருக்கும்என்றான்.

 

சீக்கிரமா வந்துடு ராஜா..அகல் அப்பா ஜாதகம் பார்க்க,உன்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னார்..”என்றவரை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.

 

வெளி வேலையை முடித்துவிட்டு வந்த கிருஷ்ணனும்,”எங்கேயோ கிளம்பிட்டாப்ல இருக்கே?”மகனை பார்த்து கேட்க..

 

பார்க் வரைக்கும் போயிட்டு வரலாம்னு பார்க்கறேன்-ப்பாஎன்று சமாளிக்கவும்,

 

பொழுது போகலைன்னு பார்க் போறியோ?”கேட்க,

 

ஆமாம்என்றான்.

 

அப்போஇனி நீ என் கூடவே ஆபிஸ் வந்துடுஎன்றார்.

 

திடுக்கிட்டு தான் போனான் விஷ்வா..

 

என்னால முடியாது-ப்பாமறுக்கவும்..

 

எவ்வளவு நாளைக்கு வீட்டை சுத்தியே வருவ விஷ்வா..உன்னால காலேஜ்-க்கும் வேலைக்கு போக முடியாதுஎங்க போனாலும்,உன்னை பற்றி விசாரிப்பாங்க..தேவையில்லாத பிரச்சனைகள் வரும்..அதனால நீ நம்ம ஆபிஸ்-கே வந்துடு..சொந்த தொழில்..யாரோட தலையீடும் இருக்காது..நானும் நிம்மதியாஇங்க விவசாயத்த மட்டும் பார்ப்பேன்என்றவர்,

 

கார் சாவியை கொடுத்து,”ஆபிஸ்-க்கு போஎன்றார்.

 

அவரை மறுத்து பேச அவனால் முடியாது..அம்மாவை ஆதரவிற்காக பார்க்க..”இன்னைக்கு உங்க அக்கா வீட்டுக்காரர் வர்றேன்னு சொன்னாரே..மறந்துட்டிங்களா?”என்று அவர் காரியத்தில் கண்ணாக இருக்க..

 

அகலுக்கும்,விஷ்வாக்கும் கல்யாண பொருத்தம்,நல்லா இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சது தானே..இப்போ புதுசா பார்க்க என்ன இருக்கு?”என்று கேட்க..

 

கல்யாண விஷயத்துல ஏனோ தானோன்னு இருக்க கூடாதுங்க..ஏற்கனவே இப்படி தான் பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணி வைச்சு,ராஜா வாழ்க்கை இப்படி இருக்கு..இந்த முறை ஒன்னுக்கு நாலு முறை பொருத்தம் பார்ப்போம்எனவும்..மனைவியை முறைத்தார் கிருஷ்ணன்.

 

இப்போவுடனே கல்யாணத்துக்கு என்ன அவசரம் ராணி..?”என்று முதலிலிருந்து ஆரம்பிக்க..

 

இப்படி பேசாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்..ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பிக்கும் போது,தடங்களா ஏதாவது சொல்லி வைச்சிடறீங்க..எனக்கு வர்ற கோபத்துக்கு,ஏதாவது சொல்லிட போறேன்போங்க..”என்று திட்ட ஆரம்பிக்கவும்..

 

நீ என்ன சொன்னாலும்,என் முடிவில மாற்றம் இல்ல..”என்றவர்,

 

மகனிடம்,”நீ இன்னைக்கு..இப்போவே என்னோட ஆபிஸ் வா..உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்..எனக்கும் உதவியா இருக்கும்..நீ ஒரு நல்ல நிலமையில இருந்தா..என்னோட அக்கா பொண்ணை விட..நல்ல பொண்ணா,உனக்கு அமையும்..வா போகலாம்என்று கையையே பிடித்துவிட்டார்.

 

அப்பாவின் பேச்சை விஷ்வாவால் மறுக்க முடியவில்லை..தற்சமயத்துக்கு கல்யாண பேச்சை ஒத்திப் போடுவதற்கு இதை விட சிறந்த வாய்ப்பு இருக்காது என்றும் மனதில் தோன்ற…”நான் வர்றேன்-ப்பாஎன்று சம்மதம் சொன்னவன்..

 

காலேஜ்-க்கு வேலைக்கு போக முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கே-ப்பாஇந்த பிரச்னையை முடிக்கறதுக்கு வழியே இல்லையாப்பா..? மதுவோட இறப்புக்கு காரணம் என்னன்னு நாம தெரிஞ்சுக்கிட்டா..என் மேல தப்பு இல்லைன்னு நிரூபிச்சிட்டா..நான் திரும்பவும்,காலேஜ்-கே வேலைக்கு போக முடியுமே-ப்பா..

 

உங்களுக்கு தெரியும்..எனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்னு..!”என்று தன் மனத்தாங்கலை வெளிப்படுத்த..

 

உன்னோட மனநிலை என்னன்னு எனக்கு புரியுது விஷ்வா..ஆனால் நாம நினைக்கிறதை எல்லாம்,நம்மால நடத்திட முடியாது..மதுவோட இறப்புக்கு காரணம் என்னன்னு டிடெக்டிவ் வைச்சு வேணா மூவ் பண்ணலாம்..

 

ஆனால் அதுக்கு எல்லாரோட சப்போர்ட்டும் வேணும்..எல்லாரும் அவங்களுக்கு பிரச்சனை வந்துடும்னு பின்வாங்கிடறாங்க

போலிஸ்-க்கு பிரசர் கொடுத்தா..அது திருப்பி உனக்கே பிரச்சனையா வந்து முடிஞ்சுடுது

 

சந்தேக கேஸ்ல முதல்ல உன்னை தான் அரெஸ்ட் பண்ண பார்க்கறாங்ககுதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரிபுதுப்பொண்ணு இறந்தா..அதுக்கு காரணம்,புருஷனும்,அவனோட குடும்பமுமா தான் இருக்கும்னு,மொத்த பழியையும் தூக்கிப் போட்டுட்டு..கேசை முடிச்சு போயிட்டே இருக்காங்க விஷ்வா

 

உன்னை வெளில கொண்டு வர்றதுக்கே ரொம்ப போராடிட்டோம்..டிவில,பேப்பர்ல  உன்னோட பேர் வந்துடக் கூடாதுன்னுநாங்க செலவளிச்ச பணம் கொஞ்ச,நஞ்சமில்ல..கடந்து போன நாட்கள நினைச்சாஇதென்னடா வாழ்க்கைன்னு தோணுதுஎன்றவர்..

 

மதுவுக்கு நாம எந்த தப்பும் பண்ணலைன்னு தெரியும்அது போதும் நமக்கு..! இப்போ நீ பழசெல்லாம் இயற்கையாவே மறந்துட்ட..!உன்னோட ஞாபக மறதியை,ரொம்ப நல்ல விஷயமா நினைச்சுட்டு..புது வாழ்க்கையை ஆரம்பி விஷ்வா..

 

நான் இப்போ ஆபிஸ் கூப்பிடறதுக்கு காரணமும் அது தான்..ஒரு ஆம்பளைக்கு தைரியத்தை,நிம்மதியை கொடுக்க கூடிய முக்கியமான விஷயம்..அவனோட வேலை தான்

 

நம்ம கவலைகளை மறக்க..வேலை விஷயத்துல கவனத்தை செலுத்தினா..சீக்கிரம் வாழ்க்கைல முன்னேறிடலாம்..அதை விட்டுட்டு,வீட்டுலையே அடைஞ்சு கிடந்தா..மனசு கண்ணாப்பின்னான்னு யோசிக்கும்..தேவையில்லாத கெட்ட பழக்கமும் வந்துடும்…”என்றார்.

 

புரியுதுப்பாஎன்று ஒரே வார்த்தையில் விஷ்வா முடிக்கவும்,

 

மனைவியை பார்த்தவர்,”கல்யாணம் பண்ணி வைச்சிட்டா மட்டும் நிம்மதி கிடைச்சுடாது ராணி..அகலுக்கு எல்லா விஷயமும் தெரியும்னாலும்விஷ்வாவை கணவனா ஏத்துக்க..அவனுக்கு ஒரு வேலை வேணும்..நாம சம்பாதிக்கிறதுல,அவன் உட்கார்ந்து சாப்பிட்டா..கட்டின பொண்டாட்டி சுத்தமா மதிக்க மாட்டா..

 

முதல்ல விஷ்வா ஆபிஸ்க்கு வந்து பழகட்டும்..அப்புறம் எல்லாம் தானா நடக்கும்..நீ எதுக்கும் விஷ்வாவை வற்புறுத்தாதேஎன்று இறுதியாக கூறிவிட..கணவனின் பேச்சில் இருந்த நிதர்சனத்தால்,ராணியும் எதிர்த்துப் பேசவில்லை..

 

விஷ்வாவே..”ஆபிஸ் போகலாம்-ப்பாஎன்று கிளம்பவும்..சந்தோஷமாக அழைத்து சென்றார்.

 

காரில் அப்பாவுடன் பயணம் செய்த சமயத்தில்,சுயநலமாக யோசிக்கிறோமோ என்று கூட விஷ்வாவிற்கு தோன்றியது..கூடவே வேறு வழியில்லை என்றும் தோன்றியது..

 

வெறுமனே வீட்டை சுற்றி வரவும் முடியாது..வெளியே சென்று மதுவை பற்றி விசாரிக்கவும் முடியாது..யாரும் உதவிக்கும் வரப்போவதில்லை..இந்த சிக்கலான சூழலில்,என்ன முடிவெடுப்பதென்று திணறி தான் போனான் விஷ்வா..

 

யோசனையில் அமர்ந்திருந்த மகனை பார்த்த கிருஷ்ணன்,மகனின் கையில் கை வைத்தவர்,”உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய வைக்கிறேன்னு கோபப்படாதே விஷ்வா..நிதர்சனம்னு ஒன்னு இருக்கே..!!நிகழ்காலத்துல வாழறதுக்கு வேலை வேணும்..வாழ்க்கை துணையும் வேணும்..புரியும்னு நினைக்கிறேன்எனவும்,அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

அவர்களது அலுவலகம் வந்தவுடன்,”பிரதாப்-க்கு தான்,இந்த பஸ் கம்பெனியை கொடுக்கறதா இருந்தேன்..இப்போ இருக்கற நிலமையில,உனக்கு நான் கொடுக்கற சொத்து,இந்த கம்பெனி தான்..!

 

ஆபிஸ்ல நடக்கற எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டேன்..லாபமோ,நஷ்டமோ எல்லாத்துக்கும் நீயே பொறுப்பு..!ஏதாவது தெரியலைன்னா கேளு..உனக்கு உதவி செய்யறேன்என்றவர்,பொறுப்பை விஷ்வாவை ஒப்படைத்தார்.

 

லீகலா செய்ய வேண்டிய விஷயங்கள,அடுத்த வாரம் பிரதாப் வந்ததும் பார்த்துக்கலாம்எனவும்,

 

பிரதாப்பையும் ஒரு வார்த்தை கேட்டுக்கங்கஎன்றான்.

 

அவனை கேட்காம,நான் எப்படி முடிவெடுப்பேன் விஷ்வா..உன்னோட அண்ணனுக்கு சம்மதம் தான்..அதோட இந்த கம்பெனிக்கு ஈடா..அவனுக்கு நிலம்,நகைன்னு கொடுத்துக்கலாம்உனக்கு வேற எதுவும் கொடுக்க மாட்டேன்..அதை மனசுல வைச்சுக்கிட்டு..வேலையை பார்என்றவர் கிளம்பிவிட..அப்பாவின் சீட்டில் அமர்ந்தான் விஷ்வா..

 

தனக்கு பிடிக்காத வேலை..எப்படி செய்யப் போகிறோம் என்பதே விஷ்வாவின் மனதில் ஓடமனதினில் அப்பா பேசியவைகளும் வந்து செல்ல..நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டான் விஷ்வா

 

நாட்களும் அதன் போக்கில் செல்லபிரதாப் ஊருக்கு வந்து..குடும்பத்தை பார்த்து சென்றது தவிர..பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

 

மதுவை பற்றி அவ்வப்போது விசாரிக்க நினைக்கும் சமயங்களில்..ஏமாற்றம் மட்டுமே விஷ்வாவுக்கு மிஞ்சும்.மற்றபடி நாட்கள் இயல்பாக கடந்தது விஷ்வாவிற்கு..!!

 

ராணிக்கு தான் மனதில் லேசான சந்தேகம்..மது ஆவியாக வந்த விஷயம் உண்மையா..பொய்யா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்..

 

ராதிகாவிற்கும் அடிக்கடி போன் செய்து,தனது சந்தேகத்தை கேட்டுக் கொண்டேயிருக்க..”மதுவோட தொந்தரவு இல்லைன்னா..அதுக்காக சந்தோஷப்படுங்க அத்தை..அதை விட்டுட்டு,நான் பொய் சொன்னேனா-ன்னு கேட்டு,கடுப்பேத்தாதீங்கதிட்டிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

 

ராணியும் மேற்கொண்டு ஆராயவில்லை..அகல்விழியோடு மகனின் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடை செய்து கொண்டிருந்தார்.

 

விஷ்வா அலுவலகம் சென்று சரியாக இரண்டு மாதமாகிவிட்டது..வேலை அவனுக்கு பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

 

அவ்வப்போது எழும் மதுவின் நினைவுகள் அவனை காயப்படுத்திக்கொண்டேயிருக்கஇன்று வேலைகளை விரைவாக முடித்துவிட்டு,மதுவின் பெற்றோர் வீட்டுக்கு செல்வதென்று முடிவெடுத்து கிளம்பும் சமயம்,ஷங்கரிடமிருந்து விஷ்வாவிற்கு போன் வந்தது..

 

என்ன விஷ்வா..எங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்ட போல தெரியுது?”எனவும்,

 

கொஞ்சம் பிசி ஷங்கர்..அதான் பேச முடியல..எப்படி இருக்க..மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?”என்று கேட்கவும்..

 

நான் நல்லாயிருக்கேன்..மேரேஜ்..கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டேன்நீ என்னோட அண்ணன் அட்ரஸ் வாங்கினியே..போய் பார்த்தியா?”எனவும்,

 

போக முடியல ஷங்கர்..ப்ரீ டைமே கிடைக்கறதில்ல..இன்னைக்கு தான் ஆபிஸ் விட்டு சீக்கிரமாவே கிளம்ப போறேன்என்றான்.

 

ம்ம்..சரிடா..அடிக்கடி போன் பண்ணு..நான் வைக்கிறேன்என்று போனை வைத்துவிட..விஷ்வாவிற்கு சங்கடமாய் போனது..!

 

இந்த வேலை எல்லாத்தையும் மறக்கடிச்சிடுதுஎன்றவன்..மதுவின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்துவிட்டு,விக்னேஷின் நம்பருக்கு போன் செய்ய..வெகு நேரத்திற்கு பிறகு,போனை எடுத்த விக்னேஷ்..”ஹலோ..யாரு..?”என்று கேட்க..

 

நான் விஷ்வாமதுவோட ஹஸ்பன்ட் பேசறேன்எனவும்..

 

மதுவா..யாரது..?அப்படி யாரையும் எனக்கு தெரியாது..”என்று பேசியவன் குரலே சொன்னது..அவன் போதையில் இருக்கிறானென்று…!

 

காலையில் பேசிக்கொள்ளலாம் என்று போனை வைக்க நினைத்தான்..

 

ஆனால் இன்று போல் நாளை வேலையில்லாமல் இருக்குமா என்று தெரியாததால்..பொறுமையாக பேச முடிவெடுத்தவன்,”எனக்கு உங்களை பார்க்கணும் விக்னேஷ்..வீட்டுக்கு வரலாமா?”என்று கேட்க..

 

உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன்..இதுல நீ எதுக்குடா என் வீட்டுக்கு வரணும்னு சொல்ற..போனை வைடா?”என்று திட்டியவன் போனை வைத்துவிட்டு,சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்..

 

போனையே ஒருகணம் வெறித்துப் பார்த்த விஷ்வா..சோர்ந்து போய் கண் மூடி சேரிலையே அமர்ந்துவிட்டான்

 

மனைவியின் இறப்பு பற்றி விசாரிக்கலாம் என்று ஆரம்பித்தாலே இப்படி தான் நடக்கிறதுமதுவின் அப்பாவிற்கு ஒருமுறை போன் செய்யவிஷ்வாவின் பேரை கேட்டதுமே மேற்கொண்டு பேச வழியில்லாமல் வைத்துவிட்டார்..

 

மதுவின் நண்பர்கள் குழுவிடம் பேசலாம் என்று எடுத்த முயற்சிகளும் வீண்..!அவர்கள் மனதில்..விஷ்வா கொடுமைக்காரனாக பதிந்திருந்தான்..அவனால் தான் மது தற்கொலைக்கு முடிவெடுத்தாள் என்று ஆணித்தரமாக பேசி..விஷ்வாவை காயப்படுத்தினார்கள்..

 

இதை இப்படியே விட்டுவிடலாம் என்றும் விஷ்வாவிற்கு தோன்றியது..முயற்சி எடுத்தும் பலனில்லை எனும் போது..வேறென்ன செய்யமனதை திடப்படுத்திக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் காரை எடுக்கஅவனருகில் அமர்ந்திருந்தாள் மது

 

உனக்கு சரியான வழி காட்ட என்னால முடியல விசுமுன்னைப் போல என்னால உன்னோட உணர்வுகளோட கலக்க முடியல..பக்கத்திலிருந்து,நான் மட்டும் கதறி அழுதுட்டு இருக்கேன் விசு..’கண்ணீர்விட்டவள்..விஷ்வாவின் வீடு வந்ததும்..உள்ளே செல்ல பிடிக்காமல்,காற்றில் வெறித்தனமாய் அலைபாய ஆரம்பித்துவிட்டாள்.

 

No comments:

Post a Comment