என்னவோ மயக்கம்-4



4
 பிரத்யாவின் சிரிப்பு,மதுவின் கோபத்தை இன்னும் தூண்ட..“பல்லைக் காட்டினது போதும்.அடுத்து எங்க போகணும்.சொல்லி தொலை.உன் காதலோட நினைவு சின்னங்கள் இன்னும் எங்கெங்க இருக்கு.வந்து தொலையறேன்”கோபப்பட்டாள் மது.

“தேங்க்ஸ்டி பட்டுக்குட்டி”கொஞ்சியவளை என்ன செய்யவென்றே மதுவிற்கு புரியவில்லை.

தான் அளவுக்கதிகமாய் கோபப்பட்டும்,அதன் எதிரொலிப்பு இப்படி இருக்க,பாவமாய் பார்த்தாள்.

“காதல் வந்தால்,இப்படியுமா சிரிச்சுட்டே சுத்துவாங்க.சத்தியமா எனக்கு ஒண்ணுமே விளங்கலை ப்ரத்யா”சலிப்பாய் விளக்கம் கேட்டாள்.

“விளக்கம் கொடுக்க எல்லாம் எனக்கு நேரமில்லை.அடுத்து நாம நல்ல ஹோட்டலா போய் வயிறு முட்ட சாப்பிடறோம்.அப்போ தான் அடுத்து எங்க போறதுன்னு யோசிக்கவே முடியும்”என்றதற்கும் மறுப்பில்லாமல் எதிர்ப்பட்ட உயர்தர உணவகத்தில் காரை பார்க் செய்தாள்.

இருவருக்கும் தேவையான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு அமைதியாய் காத்திருக்க,ப்ரத்யாவின் போன் அந்த அமைதிக்கு சங்கு ஊதியது.

காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும்
அலைந்திட தானா சொல்

“ரிங்டோன்க்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”மது முணுமுணுக்க,போனை சைலன்ட்டில் போட்டுவிட்டாள்.அடிக்கடி நடப்பது தான்.ரவீந்தர் தான் அழைத்திருப்பார் என்பது மதுவின் யூகம்.

ஆர்டர் செய்த உணவு வந்துவிட சிறிது கவளம் உணவை எடுத்து தனியே வைத்தாள்.

மது முறைத்து பார்க்க,”இது காக்காவுக்கு தான்.அருண்-க்கு இல்லை.. நான் ஓவரா லவ் பீல் ஆவறேன்னு நீ காண்டாகாதே”காரணத்தை சொல்லிவிட்டு உண்ண துவங்க,

“எனக்காக நீ அவனை காக்கா எல்லாம் சொல்ல வேண்டாம்..இப்படியெல்லாம் நீ சொல்றது தெரிஞ்சாலே,உன்னைப் பார்த்தாலும் பார்க்காமல் போயிடுவான்.நீ இவ்வளவு காதலிக்கற அளவுக்கு அவன் தகுதி வாய்ந்தவனா என்பதே எனக்கு புரியலை.இப்பவும் காலம் கடந்து போகலை.காதலும் கடந்து போகும்னு நினைச்சுக்கோ”

கண்டங்கள் விண்டாலும்,மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது”என்றதும் புரியாது விழித்த மது,சுதாரித்துக்கொண்டவள்,

“எருமை எருமை..காதல் பாட்டா கேட்காதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்..அப்படியே மனப்பாடம் பண்ணி,நான் பேசும் போது கரெக்ட்டா கவுன்ட்டர்  கொடுக்கறது..உன்னை இந்த குஷ்பூ இட்லியாலையே அடிக்கறேன் பாரு”என்று இட்லியை எடுத்து வீசியெறிவது போல கொண்டு வர,நல்ல வேலை தனி கேபின் என்பதால் சரியாய் போயிற்று.

“கொஞ்சம் சட்னி சேர்த்து வீசிடு ப்ளீஸ் செல்லம்”என்றெல்லாம் கொஞ்சினால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது(இது தேறாத கேஸ்னு தானே.எக்சாக்ட்லி)

நெஞ்சை தடவி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் மது,இது அவளின் மேனரிசம்.அடிக்கடி இப்படி செய்வாள்.

கையில் இருந்த இட்லியை தட்டில் வைத்துவிட்டு,”நான் இன்னைக்கே கிளம்பறேன் ப்ரத்யா.கிட்டத்தட்ட ஒரு மாசமா சுத்திட்டு இருக்கோம்.எந்த வேலை வெட்டியும் இல்லாமல்,இப்படி ஊர் சுத்தறது எனக்கு போர் அடிச்சிடுச்சு.இனியும் விளையாட்டுத்தனமா என்னால உன்கூட சுத்த முடியாது.அக்காங்களுக்கெல்லாம் சீர் செய்ய வேண்டிய கடமை இருக்கு.அதுக்கு பணம் வேணும்.அதுக்கு முதல்ல வேலையை தேடனும்.அதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.அந்த பயம் தான் கோபமா மாறுதுன்னு எனக்கே நல்லா புரியுது.இனியும் உன்னோட என்னால வர முடியாது”

அமைதியாய் இருந்தாள் ப்ரத்யா.

“கோபமா ப்ரத்யா”

“கோபம் தான்.அளவுக்கதிகமா கோபம் வருது தான்.மனசு ரொம்ப வலிக்குது தான்.ஆனால் நான் அதை சொல்லி,என் சோகம் உன்னை தாக்கினா,என்னால தாங்க முடியாது..அபிராமி..அபிராமி”

‘என்ன சொல்ல வர்றா’ முழித்தவள்,கமலின் பாடலைத்தான் இப்படி மாற்றிப்போட்டு பேசியிருக்கிறாள் என்பது புரிய,வந்த சிரிப்பையும் அடக்கி,

“நான் சீரியஸா பேசறேன் ப்ரத்யா.டாபிக் சேஞ் பண்ணாதே”என்றாள்.

“ஹ்ம்ம்..நீ..நீ தப்பா நினைக்கலைன்னா,உனக்கு..உன..க்கு வேண்டிய பணத்தை நானே தர்றேன்.நீ..நீ என் கூடவே இருந்துடு”

“அப்போ இவ்வளவு நாள் உன் கூட இருந்ததுக்கும் சேர்த்து பணத்தை கொடுத்துடு.நட்பை விலை பேசின புண்ணியம் உனக்கும்,அதுக்கு மறுப்பே சொல்லாமல் பணம் வாங்கிக்கிட்ட பாவமும் என்னை சேரட்டும்”

“கோபப்படாதேன்னு என்னால சொல்ல முடியல மது.இது..உன்னோட இந்த கோபம் தான் என்னை உயிர்ப்போட அலைய வைச்சிட்டு இருக்கு.i need your presence.என்னோட நீ இருன்னு சொல்றதுக்கும் காரணம் இருக்கு.உன்னை உயிர்ப்பா வைக்கிற அளவுக்கு,உனக்கு பிடிச்ச வேலையை நான் வாங்கி தர்றேன்.ஜஸ்ட் முப்பதே நாள்.அதுவரைக்கும் நீ என்னோட எப்பவுமே இருக்கணும்.

நான் நிச்சயம் உன்னோட நட்பை விலை பேசலை.உன்னோட நேரத்தை நான் வீணாக்கறேன்னு எனக்கே புரியுது..இப்போ நீ எனக்கு ட்ராவல்-க்கு கைட் பண்ற மாதிரி நினைச்சிட்டு என் கூட வா.உனக்கு தான் எந்த வேலையையும் மரியாதை குறைவா பார்க்க தெரியாதே ”என்றவள் நாசூக்காக கண்களை துடைத்துக்கொண்டாள்.

பிரத்யாவின் மனகஷ்டம் முழுதாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு மதுவிற்கு புரியத்தான் செய்தது.கல்லுக்குள் ஈரம் என்பது போல,கோபமாய் பேசும் மதுவிற்கு மற்றவர்களின் அழுகையை காண பொறுக்காதுஅதனால் தான் இவளின் உறவினர்கள் இவளை பணம் காய்க்கும் மரமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.அது புரிந்திருந்தும் சகோதரிகளுக்காக விட்டுக்கொடுத்து சென்றுகொண்டிருக்கிறாள்.

இப்போது தோழிக்காகவும் விட்டுக்கொடுத்தாள் மது.

“நான் கூட இருக்கேன்.பணம் எல்லாம் வேண்டாம்.எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்”என்றவளுக்கோ எப்படி சமாளிக்க போகிறோம் என்றே தெரியவில்லை.

மதுவின் குடும்பத்தில் மொத்தம் நான்கு பெண்கள்.இவள் கடைசி.இவளுக்கு முன் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்து இறந்துவிட்டது.ஆறு பிள்ளைகளை பெற்ற பின்பும் ஒரு பெண்ணிற்கு உடம்பில் வலு இருக்குமோ? பிள்ளை பெற்றுப்போடும் இயந்திரமாய் இருந்துவிட்டு,வலு இழந்த நிலையில் போய் சேர்ந்துவிட்டார்.அப்பா குடிகாரர்.எப்படியோ முதல் மூன்று பெண்களுக்கு கடனை எல்லாம் வாங்கி பதினெட்டு வயது பிறக்கும் முன்னரே திருமணம் செய்து வைத்து புண்ணியத்தை கட்டிக்கொண்டு பரலோகத்துக்கு போய்விட்டார்..

எஞ்சியது மது தான்..அதுவும் ஆசை ஆசையாய் ஆண்பிள்ளைஎன எதிர்பார்த்து ஏமாந்து போய் கிடைத்த பெண்பிள்ளை..மதிப்பு தான் இருக்குமா..ஆனால் கொஞ்சம் பாசம் கிடைத்தது..அதனால் தான் என்னவோ அப்பாவின் கடனுக்கெல்லாம் வாரிசாய் இவள் மாறிவிட,படித்த படிப்பு கைகொடுத்ததால் தப்பித்தாள்.கூடவே யாரும் நெருங்க இயலா கோபமும்,நெஞ்சில் நேர்மையும் துணிவும் குறைவில்லா நற்குணமும் கை கொடுத்தது.

கடனெல்லாம் அடைத்த நிலையில்,சகோதரிகளின் மாமியார் தொல்லை இவளுக்கு பெரும் தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.இவள் நினைத்தால் அனைத்தையும் தூசாக தட்டிவிட்டு செல்லலாம் தான்.ஆனால் இந்த அன்பெனும் விலங்கு..ஆசை ஆசையாய் பூட்டிக்கொள்ள செய்கிறது.விலங்கை உடைக்க அவள் மனம் விரும்புவதில்லையே!!

ஒருத்தி அன்புக்காக ஏங்குகிறாள்.இன்னொருவள் அன்பின் பாரத்தை சுமக்க இயலாமல் போராடுகிறாள்.ஏன் இந்த பாரபட்சம்.ஒரு வாய் உணவுக்கு போராடுபவர்களுக்கு வரிசையாய் கிடைக்கும் பிள்ளை வரம்..குழந்தை வரம் வேண்டி தவிப்பவர்களுக்கு கிடைப்பதில்லையே..

பொய் துப்பாக்கி வைத்து விளையாட வேண்டிய வயதில் நிஜ துப்பாக்கியை கண்டு பயந்து,ஒளிந்து வாழும் அவல நிலையில் பிறக்கிற பிள்ளைகளை,ஏங்கி தவிப்பவர்களுக்கோ இல்லை உதவும் மனப்பான்மை உள்ளவர்களுக்கோ கொடுத்தால் தான் என்ன..பிஞ்சுக்குழந்தைகள் ரத்தம் சிந்தாது இருக்குமல்லவா..யாரிடம் இதை எடுத்து சொல்வது..கடவுளிடமா..செய்யும் கர்ம வினைகள் தான் அனைத்திற்கு காரணம் என்று சித்தாந்தங்கள் சொல்லிவிடுகின்றன..

வாழ்க்கையின் சூட்சுமம் புரியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...மேற்கொண்டு என்ன சொல்லன்னு தெரியலை..கண்ணு வேர்க்குது.குஷ்பூ இட்லி சாப்ட்டுட்டு இருக்கற மது மேல கவனத்தை கொண்டு போவோம்(நம்மால முடிஞ்சுது அவ்ளோ தான்)

உணவை வீணாக்க மது விரும்பமாட்டாள் என்பதால்,வலுக்கட்டாயமாய் இருவரின் வயிற்றிலும் உணவு இறங்கியது.

இருவரும் காரை நோக்கி செல்ல,பிரத்யாவிற்கு மதுவிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் போல் தலைதூக்க,அதை செய்ய விடாமல்,தடுக்கும் தோழியின் மேல் கோபமாய் வந்தது.

இருவரும் பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்கள்.அப்போது ஏற்பட்ட நட்பு எப்படி நெருங்கிய நட்பாய் மாறியது என்று இருவருக்குமே தெரியாது.

பொருளாதரா பேரிழப்பால்,ஐடி கம்பெனியில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர,அந்த லிஸ்ட்டில் பிரத்யாவும் மதுவும் வந்தார்கள்.பிரத்யாவைக் கூட வேலையில் கெட்டி இல்லை என்று நிறுத்தினால் ஒத்துக்கொள்ளலாம்.அவள் எதற்காக,எப்படி டிகிரி படித்தாள் என்று நமக்கு தானே தெரியும்.

ஆனால் மதுவின் பெயர் வந்தது தான் கொடுமை.மேனேஜரின் அல்ப புத்தி,மதுவின் ஆதரவில்லா தனிமையை பயன்படுத்தி வாலாட்ட சொல்ல,அதற்கு மது கொடுத்த எதிர்வினை எல்லாம் ஒன்று சேர்ந்து அவளுக்கும் வேலை பறிபோய்விட்டது.இது தெரிந்த இவளின் அக்கா மாமியார்கள் கூட்டணி போட்டு பேசியது தான் கொடுமையிலும் கொடுமை..அதிலும் பிரத்யாவுடன் ஊர் சுற்ற கிளம்பியதும் அவர்கள் பார்த்த பார்வை..!!!

இப்போது கை நிறைய பணத்தோடு சென்றால்,”எத்தனை பேரோட ரூம்க்கு போன”கூசாமல் கேட்டுவிடுவார்கள்..இந்த இழிசொல்லுக்கும் அவள் பயப்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

காரின் அருகே சென்றதும்,ப்ரத்யா டிரைவர் சீட்டில் அமர்ந்துகொள்ள,தோளை குலுக்கிவிட்டு மறுபுறம் சென்று அமர்ந்தாள்.

“நாம ஏதாவது பிசினெஸ் செய்யலாமா மது”மெல்ல தன்னுடைய எண்ணத்தை அவளிடம் சொல்ல நினைத்தாள்.ஆனால் சொல்லும் முன்பே மதுவிடமிருந்து வார்த்தை அம்புகள் மின்னல் வேகத்தில் வந்துவிட்டது.

“நீ முதல்ல உன் பேர்ல இருக்கற பிசினெசை கவனி.காதல் காதல் காதல்னு அவனையே நினைச்சு சுத்திட்டு,எல்லா விஷயத்திலையும் ஜீரோவா நிற்கற”உண்மையை சொல்லிவிட,

“ஜீரோவா இருக்கறதுலையும் ஒரு ஆனந்தம் இருக்க தான் செய்யுது மது.எனக்கு எல்லாமே கேட்காமலே கிடைச்சிடுச்சு.அதான் நான் கேட்டும் கிடைக்காத காதல் மேல தீவிரமா இருக்கேனோ”என்றவள் சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டாள்.

தன் உணர்வுகளை அளவுக்கதிகமாய் வெளியிடமாட்டாள்.

‘உள்ளுக்குள்ளே உணர்வுகளை புதைத்துக்கொள்வதினாலோ தான்,எல்லோருக்கும் என்னுடைய காதல்..விளையாட்டு பொருளாய் தெரிகிறதோ’-பலமுறை யோசித்துவிட்டாள்.பதில் கிடைக்கவில்லை.

பெருமூச்சுவிட்டவள் தற்சமயத்திற்கு மதுவிற்கு வேலை வாங்கி கொடுக்க எண்ணமிட்டு,”மாமாகிட்ட உனக்கு வேலை கொடுக்க சொல்றேன் மது.அவர் இன்டர்வியூ செய்து,உனக்கு திறமை இருந்தால் தான் வேலைக்கு எடுத்துப்பார்.என்னோட ரெக்கமண்டேஷன் எல்லாம் அவர்கிட்ட செல்லுபடியாகாது”என்றாள்.

ஓரளவு மதுவின் மனம் குதூகளித்தாலும்,”அப்போ நீயும் வர தானே”கேட்டு சந்தேகத்தை தீர்க்க முயன்றாள்.

“வர மாட்டேன்.எப்போ மேரேஜ் வைக்கலாம்னு கேட்பார்.என்கிட்ட பதில் இல்லை”

“அருண்கிட்ட நான் பேசறேன் ப்ரத்யா.அவன் அட்ரெஸ் மட்டும் சொல்லு.சட்டையை பிடிச்சு கொத்தோட இழுத்துட்டு வரேன்”

“ஹ ஹா,கற்பனை செய்ய நல்லா தான் இருக்கு.இப்போ எங்க இருக்கறான்-னு நிஜமா எனக்கு தெரியாது”

“நிஜமாவே உனக்கு தெரியாதா.இல்ல நீ தெரிஞ்சுக்க முயற்சி செய்யலையா”

“ரெண்டாவது தான் சரி”

“அப்போ நானே கண்டுபிடிக்கறேன்.நீ இந்த மாதிரி காதல்ல உருகி கரைஞ்சு தொலைஞ்சு போறதை என்னால பார்த்துட்டு இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.இப்போ காரை நேரா நீ படிச்ச காலேஜ்க்கு விடு.அவனோட அட்ரசை நான் வாங்கிக்கறேன்”

“அவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை மது.அவனே என்னை தேடி வருவான்..சீக்கிரமா”என்றவளின் குரலிலும் மனத்திலும் அப்படியொரு சந்தோஷ ஊற்று.அப்படி என்ன தான் இருக்கிறது இந்த காதலில்..(தெரிஞ்சா சொல்லிட்டுப்போங்க ப்ளீஸ்)


No comments:

Post a Comment